புதுடில்லி: தமிழகத்தில் சனாதன கொள்கையை திணிக்க கவர்னர் ரவி முயற்சிக்கிறார் என திமுக எம்.பி டி.ஆர் பாலு தலைமையிலான திமுக குழு ஜனாதிபதியிடம் புகார் மனு கொடுத்தனர்.
தமிழக சட்டசபை கடந்த 9ம் தேதி கவர்னர் துவக்க உரையுடன் கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது கவர்னருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் உருவானது. இதனையடுத்து கூட்டத்தொடரின் பாதியிலேயே கவர்னர் வெளியேறினார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னர் கவர்னர் வெளியேறியது சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று (ஜன.,12) திமுக குழு ஜனாதிபதியை சந்தித்தனர். சந்திப்பின் போது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்.பிக்கள் டி.ஆர். பாலு,வில்சன், என். ஆர். இளங்கோ ஆ.ராசா உள்ளிட்ட தமிழக அரசின் பிரதிநிதிகள்
உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து திமுக எம்.பி டி.ஆர் பாலு டில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒப்புதல் அளித்த உரையை கவர்னர் மாற்றி பேசியது சபை விதிகளுக்கு முரணானது. ஒப்புதல் அளித்த அந்த உரையில் பலவற்றை தவிர்த்தும், சேர்க்கவும் செய்துள்ளார் கவர்னர். கவர்னர் விவகாரம் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம். திமுக குழு எடுத்தரைத்த விஷயங்களை கவனமாக கேட்டறிந்தார் ஜனாதிபதி.
கவர்னருக்கு எதிரான மனுவை சீலிட்ட கவரில் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளோம். ஜனாதிபதியை சந்தித்ததால் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கான அவசியம் இல்லை. தமிழகத்தில் சனாதன கொள்கையை திணிக்க கவர்னர் ரவி முயற்சிக்கிறார்.
தேசிய கீதத்தை கவர்னர் இழிவுபடுத்தியுள்ளார். தமிழக கவர்னர் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்புவோம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement