“சல்மான் ருஷ்டியின் விதியைப் பாருங்கள்…” – சார்லி ஹெப்டோவுக்கு ஈரான் மிரட்டல்

தெஹ்ரான்: ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோவிற்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாரிஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ வார இதழ் சில நாட்களுக்கு முன்னர் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியை சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது சார்லி ஹெப்டோ. கார்ட்டூனில் தூக்கில் தொடங்கவிடப்பட்டவர்களுக்கு நடுவில் அயத்துல்லா அலி காமெனி புத்தகம் வாசிப்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஈரான் புரட்சிப் படை மூத்த அதிகாரி கடும் கண்டனத்துடன் மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதுகுறித்து ஹூசைன் சலாமி பேசும்போது, “சல்மான் ருஷ்டியின் தலைவிதியைப் பார்க்குமாறு பிரான்ஸுக்கும், சார்லி ஹெப்டோ இதழுக்கும் கூறிக் கொள்கிறேன். இஸ்லாமியர்களுடன் விளையாட வேண்டாம். சல்மான் ருஷ்டி 30 ஆண்டுகளுக்கு முன்பு குரானையும், நபியையும் அவமதித்து ஆபத்தான இடங்களில் ஒளிந்து கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சார்லி ஹெப்டோ இதழின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரான் முடியது. இந்த நிலையில்தான் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

சல்மான் ருஷ்டிக்கு என்ன நடந்தது..? – இந்தியாவின் மும்பை நகரில் பிறந்தவர் அகமது சல்மான் ருஷ்டி. பின்னாளில் அவரது குடும்பம் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தது. ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படைப்புக்காக புக்கர் பரிசை வென்றவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தப் புத்தகம் இன்றளவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதில், ஈரான் சல்மான் ரூஷ்டி தலைக்கு விலையும் நிர்ணயித்தது. இதன் காரணமாக சல்மான் ரூஷ்டி தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் நடந்த நிகழ்வு ஒன்றில் சல்மான் ரூஷ்டி கொடூரமாக தாக்கப்பட்டார்.

ஈரானும்.. சார்லி ஹெப்டோவும்.. – சில ஆண்டுகளுக்கு முன்னர், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ இதழ், நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் படத்தை வெளியிட்டது. இது மத்திய கிழக்கு நாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினையாக சார்லி ஹெப்டோ இதழ் அலுவலகத்துக்கு நுழைந்த தீவிரவாதிகள், பத்திரிகையின் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பல்பொருள் அங்காடியில் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.