பாலிவுட்டின் பல படங்களில், ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி புகழ்பெற்றவர் ராக்கி சாவந்த். இவர் டெல்லியைச் சேர்ந்த அடில் கான் குரானி என்பவரைக் காதலித்து வந்தார். இந்நிலையில் ராக்கி சாவந்த் திடீரென தன் காதலன் அடில் கான் குரானியை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கோர்ட் மூலம் திருமணம் செய்து கொண்டார். கோர்ட்டில் முறைப்படி பதிவு செய்து, திருமண சான்றிதழுடன் சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு ஜூலை 2 ம் தேதியே இருவரும் திருமணம் செய்துகொண்டதாக ராக்கி சாவந்த் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ராக்கி சாவந்த் அளித்த பேட்டியில், “நானும் அடில் கானும் கடந்த ஜூலை 2ம் தேதியே திருமணம் செய்து கொண்டோம். ஆனால் அதனை வெளியில் சொல்லவேண்டாம் என்று என்னிடம் என் கணவர் கேட்டுக்கொண்டார்.
இப்போது நிக்காஹ் செய்து கொண்டு கோர்ட்டில் பதிவு செய்துகொண்டோம். திருமணம் குறித்து வெளியில் தெரிய வந்தால் தன் சகோதரிக்கு சரியான வரன் கிடைக்காது என்று அடில் கருதினார்” என்று தெரிவித்தார். ஏற்கெனவே ரிதேஷ் சிங் என்பவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கணவர் என்று கூறி ராக்கி சாவந்த் அறிமுகம் செய்தார். ஆனால் சிறிது நாளில் ரிதேஷை பிரிந்துவிட்டார்.
அதைப் பற்றி கூறிய ராக்கி சாவந்த், “பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவருக்கு ஒரு குழந்தை இருப்பதை தெரிந்து கொண்டேன். நான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் என்னால் அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்று கண்டுபிடித்திருக்க முடியாது. அவரைத் திருமணம் செய்து தவறு செய்துவிட்டேன். ரிதேஷ் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் என்னைத் திருமணம் செய்ததால் எங்களது திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாது.

இதனால் ரிதேஷை பிரிந்து மன அழுத்தத்திற்கு ஆளானேன். அந்நேரம் எனது வாழ்க்கையில் அடில் வந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். எனவே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நான் தாயாக விரும்புவதால் மேற்கொண்டு காத்திருக்க முடியாது. ஆனால் அவரது குடும்பத்தில் எங்களை ஏற்றுகொள்ளவில்லை என்றார். அவர் வேறு சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். எங்களுக்குள் எவ்வளவோ நடந்துவிட்டது. சில விஷயங்களை அடில் போனில் பார்த்தேன்” என்றார். `அப்படியென்றால் உங்களது கணவர் உங்களுக்கு துரோகம் செய்கிறாரா ?என்று நிருபர்கள் கேட்டதற்கு, `தற்போது மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்றார். `இந்த திருமணமும் முறிந்து போனால் மக்கள் உங்களை நம்ப மாட்டார்களே’ என்று கேட்டதற்கு, `அதற்கு நான் என்ன செய்ய முடியும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் இம்முறை என்னால் அதிக ஆதாரங்களைக் கொடுக்க முடியும்!’ என்றும் தெரிவித்தார்.