தமிழகம் தவறில்லையாம்; ஆனால் ஒன்றிய அரசு என்பது தவறாம்: சொல்கிறார் அண்ணாமலை!

பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி போராடி வருகிறார். ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு உள்ளது.

தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். மு க ஸ்டாலின் அவர்களே பலமுறை தமிழகம் என்று பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் தவறில்லை. அரசியலுக்காக திமுக இதை பெரிதுப்படுத்துகிறது. ஆளுநர் தமிழக கலாச்சாரத்தை முழுவதுமாக உணர்ந்தவர். ஆளுநர் உரையை கூட அவர் தமிழில்தான் தொடங்கினார். தமிழர் கலாச்சாரத்தை ஒருபோதும் பாரதிய ஜனதா விட்டுக் கொடுக்காது.

ஆளுநர் உரையில் ‘தமிழகம் அமைதி பூங்கா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது அது பொய்; இப்போது தான் கோவையில் குண்டு வெடித்துள்ளது. தமிழகம் அமைதி பூங்கா அல்ல .திமுக கொடுக்கக்கூடிய அறிக்கையை அப்படியே ஆளுநர் படிக்கக் கூடாது. தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் உண்மையான தகவல்தான் கொடுக்கிறோமோ என்று பார்த்து ஆளுநரிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

பல இடங்களில் மத்திய, மாநில அரசுகள் சுமூகமாக செயல்படுகின்றன. அதிகாரிகளை பொறுத்தமட்டில் மத்திய அரசும் வேண்டும், மாநில அரசும் வேண்டும். வண்டியில் இரு சக்கரம் போன்றது மத்திய அரசும் மாநில அரசும். இரண்டும் ஒரே வேகத்தில் செல்ல வேண்டும்.

ஒன்றிய அரசு என்பது தவறான கருத்தாகும். திமுக பயன்படுத்தக்கூடிய ஒன்றிய அரசு என்பது தவறான வார்த்தை. 12 பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரை வேந்தராக அறிவிக்கும் சட்டவடிவை ஆளுநர் நிறுத்தி வைத்தார. இது யுஜிசி விதி 156 படி வரம்பு மீறியதாகும். இதனால்தான் ஆளுநருக்கும், முதல்வருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. பிஜேபியை பொறுத்த வரை ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்.

தமிழக அரசு ஆளுநரிடம் அளித்த 59 சட்ட வடிவில் 15 சட்ட வடிவு மட்டுமே இதுவரை கையெழுத்து இடவில்லை. மற்ற அனைத்து சட்ட வடிவமும் கையெழுத்து இடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பத்து ஆண்டு காலம் திமுக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். பல இடங்களில் நடக்க முடியாது எனத் தெரிந்தும் வாக்குறுதி அளித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார் ஆனால் அதனை தற்போது நிறைவேற்ற மறுத்து வருகிறார்.

இதன் காரணமாக அரசு ஊழியர்கள் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பது திட்டவட்டம் பல அதே நேரம் புதிய பென்ஷன் திட்டத்தை சரியாக செயல்படுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். நிதி அமைச்சரே சொல்லிட்டாரு; பழைய ஓய்வூதிய திட்டம் வர போவதில்லை. அதுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் உள்ளது. திமுகவினர் காவல் நிலையங்களுக்கு செல்லக் கூடாது. காவல்துறை அதிகாரிகளின் கையை கட்டி போட்டுள்ளனர் இதனை முதல்வர் கண்காணிக்க வேண்டும்.ஆளுநரை தமிழக மக்களுக்கு எதிரி என சித்தரிக்க கூடாது.

ராஜ்பவனில் ஆளுநர் பொங்கல் கொண்டாடுவதில் பெருமைப்படுகிறேன்.ஆளுநரை வேலை வாங்க வேண்டியது முதல்வரின் கடமை. அதே போல் முதல்வரை வேலை வாங்குவதும் ஆளுநர் உரிமை. ஆளுநர் தமிழக அரசு சண்டை போடுவது நியாயமா? இதனால் பாதிக்கப்படுவது சமானிய மக்கள்தான் என்று அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.