திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாட்களாக சொர்க்கவாசல் வழியாக சென்று 6 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்கள் ரூ.39.40 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 1ம்தேதி புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2ம்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 10 நாட்கள் (நேற்று) வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நேற்று நள்ளிரவு சொர்க்கவாசல் மூடப்பட்டது. இதையொட்டி ஜீயர்கள் முன்னிலையில் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் கதவை மூடினர்.
தொடர்ந்து ஏகாந்த சேவை நடைபெற்று கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது. பின்னர் வழக்கம்போல் இன்று அதிகாலை மார்கழி மாத திருப்பாவை பாசுரத்துடன் நித்திய பூஜைகள் தொடங்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை 7 லட்சத்து 8 ஆயிரத்து 177 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2 லட்சத்து 10 ஆயிரத்து 731 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹42.88 கோடி காணிக்கை செலுத்தியிருந்தனர். இதில் வைகுண்ட ஏகாதசி நாளான 2ம் தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக 6 லட்சத்து 5 ஆயிரத்து 76 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் காணிக்கையாக ரூ.39.40 கோடி செலுத்தியுள்ளனர்.