சிதம்பரம்: நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சம அளவில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சிதம்பரம் அருகே வலயமாதேவி கிராமத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம் அமைப்பின் பாடகர் கோவன் பொங்கேற்று என்.எல்.சியால் விவசாயிகள் படும் துயரத்தை பாடலாக பாடினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் என்.எல்.சி நிறுவனம் தனது சொந்த பொறுப்பில் பராமரிக்க வேண்டும். நிலம் கொடுத்த அனைவருக்கும் சம அளவில் இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ சுகாதார கட்டமைப்பை செய்துகொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.