புதுடெல்லி: முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு கைத்துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல். இதனை டெல்லி போலீசார் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லி துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்திருந்தார்.
கடந்த 2022 மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவரது கருத்திற்காக அந்த கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இருந்தாலும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் ஆங்காங்கே வெடித்தது. அதோடு சர்வதேச அளவில் இந்த விவகாரம் கவனம் பெற்றது.
தொடர்ந்து அவர் தனது கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ட்விட்டரில் அறிக்கை மூலம் சொல்லி இருந்தார். அதோடு மத உணர்வுகளை புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் அதில் அவர் சொல்லி இருந்தார்.
அவரது கருத்துக்கு கண்டனம் எழுந்ததோடு நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அவர் நாடி இருந்தார். அவரது கருத்தால் நாட்டில் அப்போது நிலவிய சூழல் காரணமாக அவரை வலிமையாக கண்டித்தது உச்ச நீதிமன்றம். அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்திருந்தனர்.
இந்தச் சூழலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி வேண்டி விண்ணப்பித்திருந்தார். அதன்பேரில் இப்போது அவருக்கு அதற்கான லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை டெல்லி போலீசின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்புலம் என்ன?
- மே 26, 2022: தொலைக்காட்சி விவாதத்தில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை நுபுர் சர்மா சொல்லியிருந்தார்.
- மே 29, 2022: மத உணர்வுகளை தூண்டியதாக கான்பூரில் வழக்குப் பதிவு
- மே 30, 2022: மும்பையில் மற்றொரு வழக்குப் பதிவு
- ஜூன் 3, 2022: கான்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை
- ஜூன் 4, 2022: நுபுர் சர்மாவின் கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு
- ஜூன் 5, 2022: பாஜகவில் இருந்து இடைநீக்கம். அன்றைய தினமே சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கோரினார்
- ஜூன் 10, 2022: பல்வேறு நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை
- ஜூலை 1, 2022: இந்த விவகாரத்தில் அவருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
- ஜூலை 19, 2022: அவரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை
- இப்போது அவருக்கு துப்பாக்கி உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் தன்னை தற்காத்துக் கொள்ளலாம்