New Scheme For Ration Card Holders: இலவச ரேஷன் பொருள் வழங்குவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இலவச அரிசி முதல் பொங்கல் பொருட்கள் வழங்குவது வரை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசு, போலி ரேஷன் அட்டைதாரர்களை அடையாளம் காணவும், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரும் ரேஷன் பொருட்களை வாங்கவும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறது.
அதாவது, கண்களை காட்டினால்போதும் இனி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். கருவிழிகளை ஸ்கேன் செய்து அதன் மூலம் பயனாளர்களை அடையாளம் கண்டு பொருட்களை வழங்கலாம். இது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சர் சக்கரபாணி புதிய அப்டேட்டை தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர்,”கைரேகை வைத்து பொருள் பெற இயலாத மாற்றுத்திறனாளிகள், வயலில் வேலை செய்வோர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் கண் கருவிழி மூலம் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே மாதிரி திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
விரைவில் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, கைரேகை அழிந்தவர்களுக்கு நியாய விலை கடைகளிலேயே விண்ணப்பங்களை பெறக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சக்கரபாணி, வருவாய்துறை அலுவலகங்களுக்கு செல்லும் நிலை மாற்றப்பட்டு நியாய விலை கடைகளிலேயே இந்த விண்ணப்பங்களை கொடுக்கும் முறை அமல்படுத்தப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.