காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த இளம்பெண்ணும், அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரும் கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும், காஞ்சிபுரம் அருகேயுள்ள குண்டுகுளம் என்ற பகுதியில் நேற்று மாலை ஏழு மணியளவில் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
அந்த சமயத்தில் அருகில் மது அருந்திக் கொண்டிருந்த ஒரு கும்பல், காதலர்கள் தனியாக நின்று பேசுவதைப் பார்த்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அந்த மதுபோதை கும்பல், காதலர்கள் அருகே சென்றிருக்கிறது. தலைக்கேறிய போதையில் இருந்தவர்கள், அந்த மாணவனின் கழுத்தில் கத்தியை வைத்து அவரை மிரட்டி தாக்கியிருக்கின்றனர். பின்னர், அந்த மாணவியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று, காதலன் கண்முன்பே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
பின்னர், நடந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறி, அந்த கும்பல் இருவரையும் மிரட்டி அனுப்பியிருக்கிறது. அதற்கு பயந்து காதலர்கள் இருவரும் இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு தகவல் சென்றிருக்கிறது. அதையடுத்து, உடனடியாக இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அதில், மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த ஊக்கு என்ற சிவக்குமார், மணிகண்டன், விமல், மரம் என்ற தென்னரசு ஆகியோர் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் அனைவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.