புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் 26ம்தேதி மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக புகார் வந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார், இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்ல விடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டது குறித்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்பு குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், ராஜேந்திரன், கருணாநிதி, டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் வேங்கைவயல் கிராமத்துக்கு வந்தனர்.
இந்த குழுவினர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களிடம் விவரம் கேட்டறிந்தனர். தொடர்ந்து வெள்ளனூர் காவல்நிலைய விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி ரமேஷ்கிருஷ்ணன் தலைமையிலான குழுவினரிடமும் இந்த வழக்கு சம்பந்தமாக கேட்டறிந்தனர். இதுதொடர்பாக, அறிக்கை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று கண்காணிப்பு குழு உறுப்பினர் சுவாமிநாதன் தேவதாஸ் தெரிவித்தார்.