தமிழகத்திலேயே அதிகமாக மஞ்சுவிரட்டும் நடைபெறுவது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தான். இங்கு மாட்டுப்பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

மாட்டுப் பொங்கல் அன்று சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் கோயிலில் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அதன் பின்னர் காளைகளை அவிழ்த்து விடுவார்கள். இதற்கென சேவுகப்பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மஞ்சுவிரட்டையொட்டி அங்கு சுவாமி தரிசனம் மேற்கொண்டு காளைகளுக்கு வேட்டி, துண்டுகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மஞ்சுவிரட்டுத் திடலுக்கு வருவார்கள்.

கோயில் மாடுகள் ஓடிவரும் போது மாடுபிடி வீரர்கள் தொட்டு வணங்குவது வழக்கம். இந்த கோயில் மாடுகளுக்கு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பல தரப்பினரும் துண்டுகளை மாடுகளின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்வார்கள். இதனால் அதிகமாக துண்டுகள் விற்பனையாகும். அதற்காகவே கரூரிலிருந்து வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம்.
கோயில் மாடுகளுக்காக இங்கு மக்கள் அதிக அளவில் துண்டுகளை வாங்கி அணிவிப்பர். இதற்காக பொங்கலை ஒட்டிய காலத்தில் ஈரோட்டில் இருந்து துண்டுகளை கொள்முதல் செய்து இங்கு விற்பனை செய்கிறார்கள் கரூர் வியாபாரிகள்.