“சேது சமுத்திர திட்டத்தால் பயன்பெறப்போவது டி.ஆர்.பாலுவும், கனிமொழியும் தான்" – அண்ணாமலை தாக்கு

நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘நம்ம ஊரு நம்ம பொங்கல்’ என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகம் முன்பாக 108 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்தனர். இந்த விழாவை கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியில் 2008-ல் 4-ஏ வடிவத்தில் சேது சமுத்திர திட்டத்தை தி.மு.க அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது. இப்போதும் அதே திட்டத்தின்படி செயல்படுத்தப்படுமானால் பா.ஜ.க கண்டிப்பாக எதிர்க்கும். பழைய திட்டத்தின்படி செயல்படுத்தினால் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். ஆனால், வேறு வடிவத்தில் சேது சமுத்திர திட்டத்தைக் கொண்டுவரத் திட்டமிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அண்ணாமலை

தி.மு.க அரசு கொண்டு வரப்போகும் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதனால் பயனடையப்போவது மீனவர்கள் அல்ல, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகிய இருவர் மட்டுமே. தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானத்தில் பொய்யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சேது பாலம் என்பது 18,000 ஆண்டுக்கு முன்பு இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான சில தடயங்களும் கிடைத்திருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அதைத் திரித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசியுள்ளார். அதனால் அவர் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் மத்திய அமைச்சரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சுபஸ்ரீ மரணம் மற்றும் புதுக்கோட்டை சம்பவம் ஆகியவை தொடர்பாக காவல்துறை விசாரித்து பல்வேறு ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் வெளியிடக் கூடாது என்று காவல்துறையை ஆளுங்கட்சியினர் நிர்பந்தித்துள்ளனர். நாடு முழுவதும் இப்போது இருக்கும் ஆளுநர்கள் தகுதி மிக்கவர்களாக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட ஆளுநர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அந்தக் கூட்டணியிலிருந்த தி.மு.க-வினருக்கு நன்றாகத் தெரியும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநர் செய்யும் செயலை நியாயம் என்றும், இப்போது முதல்வரான பிறகு வேறு மாதிரியாகவும் தமிழக முதலமைச்சர் சொல்லி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்துக்கு இதுவரை 45 மத்திய அமைச்சர்கள் வந்து சென்றுள்ளனர். அவர்கள் இங்கு வந்து பல்வேறு விதங்களில் ஆய்வுசெய்து அறிக்கை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தின் வெளிப்பாடு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரியவரும். தமிழக ஆளுநர் 2021-ல் 25 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரை தமிழக அரசு கொடுத்துள்ள 84 மசோதாக்களில் 15-க்கு மட்டுமே அனுமதி வழங்காமல் உள்ளார். ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவிற்கு விளக்கம் கேட்டுள்ளார். ஆளுநர் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசுவதில் என்ன தவறு… அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம். தமிழ்நாடு என்பதும் தமிழகம் என்பதும் ஒரே பொருள்தான். ஆளுநரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.க-வினர் ஏதேதோ பேசுகிறார்கள்.

ஆளுநருக்கு தமிழக மக்கள் மீது அன்பு, பாசம் இருக்கிறது. அதை விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக ஆளுநர் தமிழக அரசின் இலச்சினையை பயன்படுத்தாதது தவறுதான். தமிழக ஆளுநரிடம் முதலமைச்சர் இணக்கமாகச் செல்ல வேண்டும். தமிழகத்தில் தற்போது சட்டசபையில் நடந்ததைப் போன்ற ஒரு சம்பவத்தை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது. ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும் என்பதே பி.ஜே.பி-யின் நிலைப்பாடு. ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை சரி செய்து கொடுக்க வேண்டும் என்பதே ஆளுநரின் கருத்து.

ஆர்.என்.ரவி – ஸ்டாலின்

பத்திரிகையாளர்களை ஆளுநர் சந்தித்து நேரடியாக பேசாமல் இருப்பதால்தான் தி.மு.க சொல்வதெல்லாம் உண்மைபோல் தெரிகிறது. மக்களாட்சிக்கு கொடுக்கக்கூடிய மரியாதையை மாண்பை ஏற்று ஆளுநர் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் இருக்கிறார். அவர் சந்தித்துப் பேசினால் ஆளுங்கட்சியின் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவரும். அதனால் தி.மு.க அரசு, ஆளுநரை சீண்ட வேண்டாம். அ.தி.மு.க-வுடன் கொள்கைரீதியாக எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை.

2024 தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக இல்லை. பா.ஜ.க தலைமை எனக்கு பல்வேறு பணிகளைக் கொடுத்துள்ளது. ஆனாலும் நான் வந்த பிறகுதான் பா.ஜ.க வளர்ந்ததாகச் சொல்லப்போவதில்லை. எனக்கு முன்பிருந்த தலைவர்கள் கட்சியை நல்லபடியாக வளர்த்ததன் வளர்ச்சியே இப்போது தெரிகிறது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை

தனக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு குறித்துப் பேசிய அண்ணாமலை, “எனக்கு வழங்கும் பாதுகாப்பு ஒருவித நெருடலை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு, உளவுத்துறை சொன்ன தகவலின் அடிப்படையில் இசட் பிரிவு பாதுகாப்பை உயர்த்திருக்கலாம். இந்தியாவில் குறைவான நபர்களுக்கு மட்டுமே இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை ஒரு கட்டுப்பாடாக நான் நினைக்கிறேன். மத்திய அரசு, உளவுத்துறை ஆய்வுசெய்து சொல்லும்போது அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.