சேலம் மாவட்டத்தில் கிணற்றுக்குள் பொக்லைன் எந்திரம் விழுந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் பொக்லைன் ஆபரேட்டர் சதீஷ்குமார்(25). இவர் சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே மாரமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் அரசு பள்ளி கட்டுமான பணியில் கடந்த சில நாட்களாக பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் சதீஷ்குமார் நேற்று காலை அப்பகுதியில் உள்ள உள்ள ஒரு விவசாய கிணற்றில் பொக்லைன் எந்திரத்தில் உள்ள பக்கெட் மூலம் தண்ணீரை எடுக்க முயற்சித்தபோது, எந்திரத்தில் அதே பகுதியை சேர்ந்த கரியமலை (63) என்பவரும் இருந்துள்ளார்.
அப்பொழுது கிணற்றின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததால், பொக்லைன் எந்திரம் கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதில் சதீஷ்குமாருக்கு நீச்சல் தெரிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். ஆனால் கரிய மலை பொக்லைன் எந்திரத்துக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கரிய மலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.