தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என்று, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டியிருந்தார்.
இதற்க்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “சட்டம் – ஒழுங்கு குறித்து இம்மாமன்றத்தில் குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் அதனை ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது.
மதக் கலவரங்கள் நடந்துள்ளதா? சாதிக் கலவரங்கள் நடந்துள்ளதா? பொது மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடதுள்ளதா? அப்பாவி உயிர்கள் பறிபோனதா? நெஞ்சை உலுக்கக்கூடிய பொள்ளாச்சி சம்பவமும், மர்மத்தின் உச்சமாய் விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய கொடநாடு கொலைகளும், கொள்ளைகளும் யாருடைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது என்று மக்களுக்கு தெரியும்.
காவல்துறை அவர்களது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை திறம்பட நிலைநாட்டிட இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அரசின் சீரிய நடவடிக்கைகளினால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதன் காரணமாகவே, பல்வேறு நாடுகளிலிருந்து தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டினைத் தேடி வந்து இங்கே முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியைவிட, திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அதிகக் கடன் வாங்கியுள்ளதாக சொல்வது முற்றிலும் தவறான தகவல்” என்று முதலவர் ஸ்டாலின் பேசினார்.