துணிவு, வாரிசு ஏற்படுத்திய பாசிடிவ் வைப்… முன்னாள் திருப்பூர் ஆட்சியரின் நெகிழ்ச்சி பதிவு!

நடப்பாண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களும் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் இடையே மோதல், தியேட்டர்களில் கட் அவுட் வைப்பதில் சச்சரவு, முன்பதிவில் போட்டா போட்டி என அனல் பறக்க தொடங்கியது. இந்நிலையில் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் இரண்டு படங்களும் வெளியாகின.

வாரிசு, துணிவு ரிலீஸ்

வாரிசு குடும்ப படமாகவும், துணிவு வங்கிகள் நம் மீது நடத்தும் சுரண்டலை வெளிப்படுத்தும் படமாகவும் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இவை குறித்த விமர்சனங்கள் இணையதளங்களில் தாறுமாறாக வைரலாகி வருகின்றன. அடுத்து வசூல் விஷயத்திலும் பலமான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளருமான விஜய கார்த்திகேயன் தனது ட்விட்டரில் போட்டுள்ள பதிவு மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

நண்பர்களிடம் ஏற்பட்ட மாற்றம்

வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்கள் குறித்தும் நேர்மறையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, துணிவு படத்தை பார்த்த விஜய கார்த்திகேயனின் நண்பர் ஒருவர் வங்கி இணையதளத்திற்கு சென்று அதன் Terms and Conditions அனைத்தையும் தெளிவாக படித்து விட்டு அடுத்த காரியத்தில் இறங்கியிருக்கிறாராம்.

நேர்மறையான திரைப்படங்கள்

இதேபோல் வாரிசு படத்தை பார்த்த மற்றொரு நண்பர், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தனது பெற்றோரை டிக்கெட் முன்பதிவு செய்து நேரில் சென்று பார்த்துள்ளார். இரண்டு படங்களாலும் நேர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. படங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகவும் அற்புதமானவை. இவையே படங்களின் வெற்றிகளை தீர்மானிக்கின்றன.

நெட்டிசன்கள் கருத்து

இதுபோன்று நல்ல படங்கள் நிறைய வர வேண்டும் என்பது போல் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் பாராட்டு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவின் கீழ் நெட்டிசன் ஒருவர், வங்கிகளின் விதிமுறைகள் குறித்தும், குடும்பத்தை எப்படி பார்க்க வேண்டும் எனவும் திரைப்படங்கள் தான் தீர்மானிக்கின்றன.

ஏமாற்றம் தரும் கல்வித்தரம்

அப்படியென்றால் நமது கல்வி எந்தளவிற்கு மோசமாக இருக்கிறது என புரிந்து கொள்ள முடிகிறது. மனிதர்களின் மதிப்பையும், போதிய விழிப்புணர்வையும் நமது கல்வி மாடல் கற்று தரவில்லை என்பது வேதனை அளிக்கப்பதாக குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், ரசிகர்கள் தங்கள் நடிகர்களின் நடிப்பு, ஆடல், பாடல், சண்டை காட்சிகளை பற்றி காரசாரமாக பேசிக் கொள்கின்றனர்.

ஆனால் வெகு சிலர் தான் திரைப்படங்களின் உண்மையான கருவை நெருங்கி சென்று பார்ப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் நெட்டிசன் ஒருவர், இதெல்லாம் நம்புகிற மாதிரியாக இருக்கு? என்ன சார் இது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.