சென்னை: நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வது குறித்து சுற்றறிக்கை பிறப்பிக்க ஜனவரி 31-ம் தேதி வரை தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகாவில் உள்ள கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் பிறப்பித்த தீர்ப்பை பதிவு செய்யக் கோரி, மரக்காணம் சார் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீதிமன்றம் தீர்ப்பளித்த நான்கு மாதங்களில் பதிவு செய்ய வேண்டும் என பதிவுச் சட்டம் கூறியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலைப் பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின் பதிவு செய்ய கோருவதை ஏற்க முடியாது எனக்கூறி, பதிவு செய்ய மறுத்து மரக்காணம் சார் பதிவாளர் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்து, தீர்ப்பை பதிவு செய்ய சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை பதிவு செய்வதற்கு, பதிவுச் சட்டத்தில் உள்ள காலவரம்பு தடையாக இல்லை. இதுதொடர்பாக பல வழக்குகளில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், “இதுதொடர்பாக சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும், சுற்றறிக்கை பிறப்பிப்பது குறித்தும் அரசும், பதிவுத்துறையும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. எனவே கால அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் ஜனவரி 31-ம் தேதி வரை தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கே தள்ளிவைத்தார்.