பொங்கல் பண்டிக்கைக்காக பாரம்பரியத்தை தக்க வைக்கும் அகப்பை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
அப்போது மண்பானையில் உள்ள அரிசியை கிளற அகப்பையை முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த “அகப்பை” தேங்காய் கொட்டாங்குச்சியினை சுத்தம் செய்து, அதில் மூங்கிலை சீவி இரண்டடி நீளத்தில் கைப்பிடியாக்கி தயாரிக்கப்படுகிறது. அகப்பையை பயன்படுத்தும் போது, பொங்கல் சுவை அதிமாகும். காலப்போக்கில் மண்பானை பொங்கல் மறைந்து போய், பாத்திரங்களில் பொங்கல் வைப்பது அதிகரித்தது.
ஆனாலும் இன்றும் அகப்பை மூலம் பொங்கலை தயாரிக்கும் பழக்கம் ஒருசில கிராமங்களில் மட்டுமே நீடித்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிக்காடு என்ற கிராமத்தில் பொங்கல் தினத்தன்று அகப்பையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அதற்காக அவ்வூரில் உள்ள தச்சுத்தொழிலாளர்கள் அகப்பையை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் பெறுவதில்லையாம். அதற்கு பதில் ஒரு படி நெல், தேங்காய், வெற்றிகை பாக்கு, வாழைப்பழம் மட்டுமே பெற்றுக்கொள்வார்களாம். இந்தப்பழக்கம் வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் காலம் காலமாக நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் பெருமை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கணபதி என்பவர் பேசும் போது, ”எங்களது மூதாதையர் காலந்தொட்டு நாங்கள் தச்சுத் தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறோம். இவ்வூரில் பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். பொங்கல் பண்டிகை வந்து விட்டால் பாரம்பரியமான அகப்பை தயாரிக்கும் பணியில் இறங்கிவிடுவோம்.
இதற்காக ஆண்டுமுழுவதும் பயன்படுத்தப்பட்ட தேங்காய் கொட்டாங்குச்சியை சேகரித்து வைத்து பின்னர் அதனை பொங்கல் நெருங்கும் நாட்களில், நான்கைந்து தினங்கள் தண்ணீரில் ஊறவைத்து அதனை உளியால் பக்குவமாக செதுக்குவோம்.
மூங்கில் மரத்தினை வெட்டி அதில் இரண்டடி துண்டுகளாக நறுக்கி கைப்பிடி தயாரித்து பின்னர் அதில் கொட்டாங்குச்சியை இணைத்துவிட்டால் அகப்பை தயாராகிவிடும்.
இந்த அகப்பையை நாங்கள் யாரும் விலைக்கு விற்பனை செய்வதில்லை. எங்களது கிராம மக்களுக்கு பொங்கலன்று பயன்படுத்த இதைத் தான் வழங்குகிறோம். நாங்கள் காலையிலேயே வீடு வீடாக சென்று கொடுத்துவிடுவோம். பின்னர் பொங்கலன்றே மதியம் எந்தந்த வீடுகளுக்கு அகப்பை கொடுத்தமோ அங்கு சென்றால் அவர்கள் தேங்காய், பழம், வெற்றிலை – பாக்கு, ஒரு படி நெல் கொடுத்து எங்களை கவுரவிப்பார்கள். இந்த பாரம்பரியம் இன்றளவும் தொடர்வதால் நாங்கள் இந்த தொழிலை மகிழ்வோடு செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இப்படி பாரம்பரியம் மாறாமல் அகப்பை தயாரித்து விற்பனை செய்யும் தச்சுத்தொழிலாளிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.