தர்மபுாி : அரூர் அருகே சந்தப்பட்டி ஏரிக்கரையில், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழர் காலத்து நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரி அரசுக்கலைக்கல்லூரி வரலாற்று உதவி பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில், வரலாற்று ஆய்வாளர்கள் இளந்திரையன், சீனன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரூர் அருகே சந்தப்பட்டி ஏரிக்கரையில், 10 நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து நடுகல் ஒன்றை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் உதவி பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:
அரூர் அருகே சந்தப்பட்டி ஏரிக்கரையில், 10ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்றை கண்டறிந்தோம். இதில் காட்டப்பட்டுள்ள வீரனின் உருவம், அவன் கொண்டை அமைப்பு நேராக காட்டப்பட்டுள்ளதை கொண்டு, இது சோழர் கால நடுகல் என்பதை அறிந்து கொள்ள இயலும். மேலும், கடவுள்களுக்கு பின்புறம் அமைக்கப்படும் பிரபை போன்ற அலங்கார வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வகையான அலங்கார வடிவங்கள், சோழர் காலத்தில் இருந்த குறுநில மன்னர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆட்சியாளர்களுக்காக அமைக்கப்படும் நடுக்கல்லில் காணப்படுவது வழக்கம். சங்க காலம் முதல் தகடூர் பகுதியை ஆண்ட அதியமான் மரபினர், பிற்கால சோழர் காலத்தில், அவர்களுக்கு திரை செலுத்தக்கூடிய குறுநில மன்னர்களாக மாறினர். எனவே, இது சோழர் காலத்தில் இப்பகுதியை நிர்வகித்த சிறு தலைவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவ்வீரனுடன் சேர்ந்து ஒரு பெண் உருவம் காட்டப்பட்டுள்ளதால், இது சதி நடுகல்லாகவும் கருதலாம்.
இக்கல்லில் உள்ள வீரனின் உருவமானது, போர் வீரனுக்குரிய உடல்வாகுடன் உயரமாக, கட்டமைப்பாக காட்டப்பட்டுள்ளது. மேலும் கழுத்தில் உள்ள 2 ஆபரணங்களில் ஒன்று, சிங்கமுகம் வைத்த கழுத்தணி போன்று அமைக்கப்பட்டுள்ளது. கைகளில் வீர கழல்களும் காட்டப்பட்டுள்ளன. மேலும், இடது கையில் ஒரு நீண்ட வாள் வைத்துள்ளது போல உள்ளது. இடது கையின் மணிக்கட்டில் மன்னர் அணியக்கூடிய பட்டை காட்டப்பட்டுள்ளது. இடது காலை சற்று அழுத்தி ஊன்றியவாறு இவ்வீரன் நின்று கொண்டிருக்கிறார். இவரது வலது கை சற்று மேல்நோக்கி காட்டப்பட்டுள்ளது. ஆனால், கையில் இருக்கக்கூடிய பொருள் சிதைந்துள்ளதால் என்ன பொருள் என்று அறிய இயலவில்லை.
மேலும், இதில் உள்ள பெண்ணின் உருவம் ஏறக்குறைய சிதைந்த நிலையில் இருந்தாலும், கையில் கழல்களும் இடுப்பில் சேலையும், அதற்கு மேல் பட்டாடை சுருள் போன்று காட்டப்பட்டுள்ளது. இப்பெண்ணின் இடது கையில் சொம்பு போன்ற நீர்குடுவையும் காட்டப்பட்டுள்ளது. பொதுவாக இப்பகுதியை சேர்ந்த உள்ளூர் தலைவனாகவோ அல்லது சிறிய அளவிலான பகுதியை ஆளக்கூடிய இனக்குழு தலைவராகவோ இருந்திருக்கலாம். இவ்வீரன் இறந்தவுடன், அவரது மனைவியும் அவனது சிதையில் வீழ்ந்து உயிர் விட்டிருக்கக்கூடும். எனவே, இதனை சதி நடுகல்லாகவும் கருதலாம். இவ்வாறு அவர் கூறினார்.