தமிழகத்தில் இந்த ஆண்டு பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில், முதற்கட்டமாக செய்முறை தேர்வும், அதைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வும் நடைபெற உள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வுகள் நடைபெற இருக்கும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவர்களும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 மாணவர்களும், பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 87 ஆயிரத்து 783 மாணவர்களும் எழுதுகின்றனர்.
ஆக மொத்தம் இந்தாண்டு பொதுத்தேர்வை 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 மாணவர்கள் எழுத உள்ளனர். இதில், தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டும் தமிழ் வழியில் தேர்வு எழுதும் 12 லட்சத்து 91 ஆயிரத்து 605 மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.