நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்! ஒரே நாளில் 3 முறை வந்த போன் கால்!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு ஒரே நாளில் மூன்று முறை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. இவருடைய அலுவலகம், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ளது. அதாவது, நாக்பூரில் உள்ள கம்லா சவுக்கின் அவரது வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவருடைய அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்து இன்று ஒரே நாளில் மூன்று அழைப்புகள் வந்துள்ளதாக நாக்பூர் காவல் துறை தெரிவித்துள்ளது. அவருடைய அலுவலகத்திற்கு இன்று காலை 11.25, 11:32 மற்றும் மதியம் 12:30 மணிக்கு மிரட்டல் அழைப்புகள் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து அலுவலகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மர்ம தொலைபேசி அழைப்புகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ’தொலைபேசியில் பேசியவரின் பேச்சை வைத்து ஆய்வு செய்து வருகிறோம்’ என நாக்பூர் உதவி போலீஸ் கமிஷனர் ராகுல் மதனே தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அலுவகத்திற்கு மிரட்டல் விடுத்து ஒரே நாளில் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ள சம்பவம் நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.