என் கணவர் ஒரு கிராமத்தில் பிறந்தவர். நன்றாகப் படிப்பார். எனவே, பெரிய கல்லூரியில் இடம் கிடைத்தது. படிப்பை முடித்தபோது நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சில வருடங்களில் எனக்கும் அவருக்கும் திருமணம் முடிந்தது. அவர் திறமையால் தன் அலுவலகத்தில் அடுத்தடுத்த நிலைக்குச் சென்றவர், ’இதே வேலையை நான் வெளிநாட்டுல செய்தா பல மடங்கு சம்பளம் கிடைக்கும்’ என்று வெளிநாட்டுக்குச் சென்றார்.

எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். நான் தமிழகத்தில் ஒரு பெருநகரத்தில் சொந்த வீடு கட்டி, பிள்ளைகளுடன் வசிக்கிறேன். கணவர் ஆண்டுக்கு ஒருமுறை வந்து செல்வார். அவருடன் பிறந்தவர்கள், என்னுடன் பிறந்தவர்கள் என அனைவருக்கும் என் கணவர் பண உதவிகள் செய்திருக்கிறார். இவர் நன்றாகச் சம்பாதிக்கிறார், உதவி, கைமாத்து என்று பணம் கேட்டால் சூழலை புரிந்துகொண்டு நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கையில், எங்களிடம் பணம் கேட்டு வருபவர்களை கணவரோ, நானோ என்றுமே ஏமாற்றியதில்லை.
இப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் என 8 குடும்பங்களுக்கு உதவியிருக்கிறோம். ’ஒரு வருடத்தில் பணத்தை திரும்பத் தருகிறோம்’, ’பையன் படிப்பு முடிந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் இந்தக் கடனை அடைத்துவிடுகிறோம்’ என்று பணத்தை திருப்பித் தர ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணமும், காலக்கெடுவும் சொல்லிச் செல்வார்கள். பணத்தை அவசரமாகத் திரும்பப்பெறும் தேவை எதுவும் எங்களுக்கு அப்போது இல்லை என்பதால், நாங்களும் யாரிடமும் காலக்கெடு எதுவும் சொன்னதில்லை.

சென்ற வருடம் எங்கள் மூத்த மகளை வெளிநாட்டுக்குக் கல்லூரிக்குப் படிக்க அனுப்பினோம். அதற்கு ஒரு பெரும் தொகை தேவைப்பட, சேமிப்பில் இருந்த காசு அனைத்தையும் திரட்டி அதை சமாளித்தோம். இந்நிலையில், என் கணவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. வேலையைத் தொடர முடியாத நிலை. எனவே, தாய்நாடு திரும்பினார். அவருக்கு முதுகுத்தண்டில் ஓர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. அவர் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை என்பதால், கடந்த ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்லமுடியவில்லை, வீட்டில் ஓய்வில் இருக்கிறர். எப்போது உடல்நிலை சரியாகும், எப்போதும் வேலைக்குச் செல்வார் என்பதும் தெரியவில்லை. திடீரென மாத வருமானம் நின்றுபோனது, இருந்த பணத்தை எல்லாம் எடுத்து மகளுக்கு சமீபத்தில்தான் படிப்புக்காகக் கட்டியிருந்தது, அறுவை சிகிச்சை செலவுகள், மாதம்தோறும் வீட்டு லோனுக்கு கட்ட வேண்டிய இ.எம்.ஐகள் எனப் பொருளாதார ரீதியாகத் திணறிப் போய் இருக்கிறோம்.
முன்பு என் கணவர் நன்றாக சம்பாதித்தபோது எங்களிடம் அவ்வளவு பாசமாக இருந்த உறவுகள் எல்லாம் இந்த ஆறு மாதத்தில் படிப்படையாக விலகிப்போய்விட்டார்கள். எங்கள் நிலைமை தெரிந்தும், எங்களிடம் வாங்கிய காசை யாரும் கொடுக்க முன்வரவில்லை. எனவே, நாங்களே கேட்க ஆரம்பித்தோம். ‘இப்போ தோதில்லையே..’, ‘நானே நிறைய கஷ்டத்தில் இருக்கேன்’ என்று ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். ஆனால், ‘நீங்க கஷ்டப்படும்போது எங்களால உங்க காசைக் கொடுக்க முடியலையே’ என்ற வருத்தம் யாரிடமும் இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. என் கணவர் உடம்பு சரியில்லாமல், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் இந்தச் சூழலில், ‘காசை கொடுக்க முடியலை. ஆனா என்ன உதவினாலும் சொல்லுங்க, ஆளா வந்து நிக்குறேன்’ என்றுகூட யாரும் சொல்லாதது, மனிதர்களை புரிந்துகொள்ள வைத்திருக்கிறது.

இந்தக் கடினமான சூழலில் எங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. அனைவரிடமும் நாங்கள் கொடுத்த பணத்தை மீண்டும் வசூலிப்பது எப்படி?