புதுடெல்லி: நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ளலாமா என்பது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
15 வயது நிறைவடையும் முஸ்லிம் பெண்கள் தாங்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சென்ற ஆண்டில் ஒரு வழக்கில் ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்டத் தரப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இஸ்லாமியச் சட்டபடி, 15 வயது நிரம்பும் பெண்கள் திருமணம் செய்யத் தகுதியுடைவர்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், இந்திய சட்டத்தின்படி, 18 வயதுக் குட்பட்ட பெண்கள் திருமணம் செய்வது சட்டவிரோதம்.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது முஸ்லிம் இளைஞர், 16 வயது முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தார். இந்திய சட்டப்படி இது குழந்தைத் திருமணம் என்று கூறி ஹரியாணா அரசு அந்தப் பெண்ணை கணவரிடமிருந்து பிரித்து குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் தங்க வைத்தது. இதை எதிர்த்து அந்தப் பெண்ணின் கணவர் சென்ற ஆண்டு ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் ஹரியாணா நீதிமன்றம், “15 வயது நிறைவடையும் இஸ்லாமியப் பெண் அம்மதத்தின்படி பருவ மெய்தியப் பெண் ஆவார். இஸ் லாமியச் சட்டப்படி, அவர் தான் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ளலாம். இது இந்தியகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை மீறுவது ஆகாது” என்று தீர்ப்பளித்தது.
மத்திய அரசு இந்தியப் பெண்களின் குறைந்தபட்ச திருமணவயதை 18-லிருந்து 21 வயதாக உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு 2021-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.