அவனியாபுரம்; பொறி பறக்கும் ஜல்லிக்கட்டு; சீறும் காளைகள் – அடக்கும் காளையர்கள்..!

தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கலையொட்டி நடைபெற்று வருகின்றன. தை திருநாளின் முதல் நாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. களத்தில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களமிறங்க இருக்கின்றனர். காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து காளைகளுக்கும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்கக்காசுகள் வழங்கப்பட இருக்கின்றன. 

காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது முதலே களத்தில் பொறி பறக்கத் தொடங்கியது. பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் வீரர்களுக்கு ஊதா, மஞ்சள், ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் சீருடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வீரர்களும் காளைகளை அடக்கும் முனைப்பில் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். முதல் காளையாக சீறிப்பாய்ந்து வந்த விக்ரம் காளையை ஜல்லிக்கட்டு வீரர்கள் லாவகமாக பிடித்து அடக்கினர். அடுத்தடுத்து வந்த காளைகளும் பெரும் ஆக்ரோஷத்துடன் சீறிப் பாய்ந்து வந்தால் வீரர்கள் சற்று தயங்கி நிற்க வேண்டியிருந்தது. 

இருப்பினும் காளைகளும், வீரர்களும் நேருக்கு நேர் மோத தயாராகவே இருந்ததால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. காளைகளை அடக்கும் காளையர்களுக்கு உடனடி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பீரோ, கட்டில், தங்கம் வெள்ளி காசுகள், சைக்கிள், இருச்சக்கர வாகனங்கள் ஆகியவை பந்தயம் கட்டி கொடுக்கப்படுகின்றன. இந்த காளையை பிடித்தால் இந்த பரிசு என அறிவித்தவுடன், அங்கு ஆரவாரம் எழும்புவதால், தீரத்துடன் இருக்கும் காளையர்கள் இந்த காளையை பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சீறிப் பாய்ந்து காளைகளை அடக்கி வருகின்றனர். அதேநேரத்தில், காளையர்களுக்கு போக்கு காட்டவும், நின்று விளையாடும் காளைகளை கண்டும் மக்கள் பூரித்து வருகின்றனர். 

முதல் சுற்று முடிவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 5 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிறியளவில் காயமடைந்த வீரர்களுக்கு அங்கேயே மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.