திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா துறை சார்பாக வட்டகானல் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இதில் வெளிநாட்டு (இஸ்ரேல் ) சுற்றுலாப்பயணிகள் மற்றும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுடன் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு சிறப்பாக வரவேற்ப்பளிக்கபட்டது. அதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில் மண்பானை வைத்து விறகு கொண்டு தீ மூட்டி அரிசி பருப்பு வெல்லம் கொண்டு பொங்கலிட்டனர்.
இதனை தொடர்ந்து தமிழ் கலாச்சாரத்தை போற்றும் வகையில் பறை இசை முழங்க சிலம்பம் சுற்றுதல், கத்திச் சண்டை, பொய்க்கால் குதிரை, உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடனத்தில் கலைஞர்கள் நடனம் ஆடி அசத்தியது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் மற்றும் பொதுமக்களையும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து, இதில் பறை இசை முழங்க இசைக்கேற்றவாறு இசை கலைஞர்களுடன் வெளிநாட்டவரும், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் இணைந்து குத்தாட்டம் ஆடியும் கரகாட்டம் ஆடியும், சிலம்பம் சுற்றியும் மகிழ்ந்தனர்.
பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் நகர்மன்ற துணை தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதிமக்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் சுற்றுலா துறை சார்பாக வெளிநாட்டவருடன் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கோலாகலம், குத்தாட்டம் போட்டு மகிழ்ந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பொங்கல் ஆர்வம் அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுப்பதாக இருந்தது.