நேபாளத்தின் போகரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானம், வனப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் மற்றும் இத்தாலியின் Leonardo நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவான, Yeti ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஏடிஆர் 72 பயணிகள் விமானம், காத்மாண்டுவில் இருந்து போகராவிற்கு பயணமானது.
5 இந்தியர்கள் உள்பட 68 பயணிகள் மற்றும் 4 சிப்பந்திகளுடன் சென்ற விமானம், போகரா சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, Seti கண்டகி நதிக்கரையில் உள்ள வனப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில், விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதில் பயணித்த 72 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், 67 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், உடல்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. விமான விபத்து குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.