இந்திய பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் `வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் மாநாடு’ ( Voice of Global South Summit) நடைபெற்றது. மாநாட்டின் முதல்நாளில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிற நாடுகளில் தலைவர்களுக்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார். இரண்டாம் நாளில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் (Shavkat Mirziyoyev) `மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இது குறித்து உஸ்பெகிஸ்தான் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஷவ்கத் மிர்சியோயேவ், “இந்த மாநாடு, `ஒரே உலகம், ஒரே குடும்பம், என்ற உலகளாவிய யோசனைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் தெளிவான நிரூபணமாகும். நிச்சயம் இந்த மாநாடு, இந்தியாவின் ஜி20 தலைமையின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன். உலகச் சமூகம் இன்று பல்வேறு முரண்பாடுகளையும், பொருளாதார நெருக்கடியின் எதிர்மறையான விளைவுகளையும் எதிர்கொள்கிறது.
சர்வதேச உறவுகளில் வெளிப்படையான உரையாடல், பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருவதை நாம் காண்கிறோம். இப்படிப்பட்ட கடினமான சூழலில், உலகின் தெற்கிலிருக்கும் நாடுகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் பல புதிய தடைகள் எழுகின்றன. இந்த நிலையில்தான், ஐ.நா-வின் முக்கியக் கொள்கையான `யாரையும் விட்டுவிடாதீர்கள்’ என்பது மிகவும் பொருத்தமானதாகிவருகிறது.

இந்த கட்டத்தில், வளரும் நாடுகளுடன் பரஸ்பர நன்மை மற்றும் உற்பத்தி உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் தீவிர பங்களிப்பை நான் வலியுறுத்த விரும்புகிறேன். சமீபத்திய ஆண்டுகளில், உஸ்பெகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மை, நடைமுறை ஒத்துழைப்பு உறவுகள் முற்றிலும் புதிய நிலைக்கு உயர்ந்து நமது மக்களின் பொதுவான நலன்களுக்கு சேவை செய்கின்றன.

வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத், வளரும் நாடுகளின் திறனைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நிபந்தனைகளை உருவாக்க வேண்டும். புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் பூமி என்று என் அன்பு சகோதரர் நரேந்திர மோடியால் வர்ணிக்கப்பட்ட இந்தியாவின் ஜி20 தலைமையில், உலக அளவில் அமைதி, பாதுகாப்புக்கான புதிய திட்டங்கள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்படும் என்று நான் நம்புகிறேன். சர்வதேச அளவில் வளரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் தீவிர முயற்சிகளை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம். மேலும், வரவிருக்கும் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பேசியிருக்கிறார்.