சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள கடை அருகில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் ஜேம்ஸ் வேதஜார்ஜ். இவர் எலக்ட்ரீஷியனாக வேலைப்பார்த்து வந்தார். இவரின் மகள் சூளைமேட்டில் வசித்து வருகிறார். அடிக்கடி அங்கு செல்லும் ஜேம்ஸ் வேதஜார்ஜ், மற்ற வேளைகளில் பிளாட்பாரத்தில் தங்கியிருந்து வந்தார்.

ஜேம்ஸ் வேதஜார்ஜ் மரணம் குறித்து விசாரித்தபோது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்தனர். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது 13.1.2023-ம் தேதி நள்ளிரவில் பிளாட்பாரத்தில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவர் மது அருந்தியிருக்கிறார். போதையிலிருந்த ராஜ்குமாருக்கும், ஜேம்ஸ் வேதராஜ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜ்குமார், அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால், தூங்கிக்கொண்டு இருந்த ஜேம்ஸ் வேதஜார்ஜைத் தாக்கியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜேம்ஸ் வேதஜார்ஜ் உயிரிழந்தார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.