மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் திங்கள்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 காளைகளை அடக்கிய பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் காளை முட்டியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான நேற்று நடைபெற்றது.பாலமேட்டில் இன்றும், அலங்காநல்லூரில் வரும் 17-ம் தேதியும் நடக்கிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் களத்தில் இன்று 800 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. காளைகளை அடக்க 355 இளைஞர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனர். போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் ஐய்யனார் கோயில் காலை உள்பட கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகின்றன.
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல் வீரர்களுக்கு தங்கக் காசு, ரொக்கப் பரிசு, இருச்சக்கர வாகனம், சைக்கிள், பீரோ, வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பல்வேறு கண்கவர் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், காலை தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளை அடக்கி வந்தனர். இதுவரை நடந்த போட்டியில் 30 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு: காளை முட்டியதில், படுகாயமடைந்து பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அரவிந்த்ராஜன் இதுவரை நடந்த சுற்றுகளில் 9 காளைகளைப் பிடித்து 3-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.