பிக் பாஸ் 6 நாள் 98: ` வெளியேறிய ஏடிகே; நெகிழ்ந்த அசிம்' – நெருங்கும் பைனல்; தொடருமா ட்விஸ்ட்!

ஏடிகே வெளியேற்றப்பட்டார். சராசரி நபர்களின் பிரதிநிதி அவர். தாழ்வுணர்ச்சியும் அங்கீகாரத்திற்கான ஏக்கமும் நிரம்பியவர். அசிமின் சர்காஸ்டிக் கமெண்ட்களைத் தாங்க முடியாமல் பல முறை மனம் புண்பட்டவர்.

அந்த உளைச்சல் தாங்காமல் மற்றவர்களிடம் புறணி பேசியது அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. என்றாலும் அசிமுடன் நட்பைத் தொடர விரும்பினார். தான் செய்த தவறை ஆத்மார்த்தமாக உணர்ந்தால், அடுத்த கணமே மனம் உருகி மன்னிப்பு கேட்டு விடுபவர். ரஹ்மானின் இசையில் பாடிய பின்னரும் கூட தன்னுடைய பெயர் பரவலாக அறியப்படவில்லை என்கிற பெரிய ஏக்கம் கொண்டிருந்த ஏடிகேவின் கலைப்பயணம் இனியாவது பல புதிய வெளிச்சங்களுடன் பிரகாசம் அடையட்டும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

பட்டுச் சட்டை, வேட்டியில் பகட்டான அழகுடன் வந்தார் கமல். “நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு அரைகிலோ மீட்டர் தொலைவில் கூட வரிசையாக உணவகங்கள் இருக்கின்றன. அதற்கு காரணம் விவசாயிகளின் உழைப்புதான். அவர்களை மதிக்க வேண்டும்’ என்று, சினிமா ஹீரோக்களுக்கு திடீரென ‘விவசாயிகள்’ மீது அக்கறை வந்து விடுவதைப் போன்ற செய்தியைச் சொல்லி விட்டு ‘தமிழ்நாடு திருநாள் வாழ்த்துகள்’ என்று அழுத்தம் திருத்தமாக ‘பொங்கல் வாழ்த்து’ சொன்னது ஒரு நல்ல அரசியல் குறும்பு.

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், அனைவருக்கும் தரமான விதைகள் அடங்கிய சிறிய பொதியைக் கொடுத்தார். அதில் எத்தனை பேர் உருப்படியாக விதைத்து வளர்க்கப் போகிறார்களோ?! சம்பிரதாயமான மகிழ்ச்சியுடன் அனைவரும் வாங்கிக் கொண்டார்கள்.

கமல்

‘அந்த நாலு பேருக்கு நன்றி..’

‘ஓகே.. இந்த நிகழ்ச்சியின் மூலம் சக போட்டியாளருக்கு நன்றி சொல்வீர்கள் என்றால் யாருக்கு.. ஏன்?’ என்று சுமாரான கேள்வியை அடுத்ததாக எடுத்து வீசினார் கமல். ஆளாளுக்கு சென்டியான காரணங்களை அடுக்க, ஷெரினா மட்டும் “எனக்கு இங்க நண்பர்கள் யாருமில்ல.. சார். வெளில போனப்புறம் யாரும் தொடர்பு கொள்ளலை” என்று கண்கலங்கி உண்மையை உடைத்துப் போட்ட துணிச்சலுக்குப் பாராட்டு.

“அப்படில்லாம் சொல்லலாமா.” என்று பிறகு ஆளாளுக்கு வருத்தப்பட்டு ஷெரினாவிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். ஒருவர் தன்னுடைய அசலான உணர்வை வெளிப்படுத்த விடுவதுதான் நாகரிகம். அதற்குப் பின்னால் நிச்சயம் ஓர் ஆழமான காயம் இருக்கலாம். அதற்குப் பரிகாரம் தேட முயல்வதுதான் நட்பு. மாறாக சம்பிரதாயமான பதிலை ஏன் சொல்லவில்லை என்று கேட்டு இம்சைப்படுத்துவது நட்பல்ல. இந்த ரவுண்டின் இறுதியில் சென்டி தாங்காமல் ஷிவின் தொடர்ந்து கண்கலங்க “நீங்க SAVED.. இப்பவாவது சிரிப்பீங்களா?” என்றார் கமல்.

அடுத்ததாக போட்டியில் இருந்து வெளியேறியவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார் கமல். “ச்சே.. அந்தச் சமயத்துல நான் இருந்திருக்கணும்.. செமயா விளையாடியிருப்பேன்’.. மற்றும் ‘யப்பா.. சாமி.. நல்ல வேளை.

ஷிவின்

அந்த டாஸ்க்ல நான் இல்லை..” என்று எந்தத் தருணங்களை சொல்வீர்கள்?! முதலில் எழுந்து முத்து, கேள்வியைப் புரிந்துகொள்ள முடியாமல் தத்துப்பித்தென்று எதையோ சொல்ல, கமலே கன்ஃப்யூஸ் ஆகி அடுத்த ஆளைக் கூப்பிட்டு விட்டார். இதில் பலரும் ‘ஸ்கூல் டாஸ்க்கை’ சொன்னார்கள். இது எல்லோருக்குமே நிகழ்வதுதான். எவ்விதக் கவலையும் இல்லாமல் நட்பையும் படிப்பையும் மட்டுமே கவனமாகக் கொண்ட மாணவப்பருவம்தான் பலருக்கும் மறக்க முடியாத இனிமையைத் தந்திருக்கும் வாழ்க்கையாக இருந்திருக்கும். எனவே மீண்டும் அதில் வாழும் சந்தர்ப்பத்தை இழக்க விரும்ப மாட்டார்கள். இதைப் போலவே உடல் ரீதியான மோதல்கள் நிகழ்ந்த விளையாட்டிற்கு பலரும் பயந்தார்கள். ‘ஹப்பாடா. தப்பிச்சோம்டா சாமி’ என்று பெருமூச்சு விட்டார்கள்.

‘யப்பா தப்பிச்சோம்டா.. சாமி..’

சுரேஷ் சக்ரவர்த்தியும், அஹமதும் செய்த சம்பவமான ‘வறுவல் நிகழ்ச்சியில்’ இருந்து தப்பித்தது குறித்து பலர் மகிழ்ச்சியடைந்தார்கள். பாராட்டுக்களை விடவும் தன் மீது சொல்லப்படும் விமர்சனங்களைத்தான் ஒருவர் ஆர்வமாக கவனிக்க வேண்டும். அதில் உருப்படியான விஷயம் இருந்தால் நிச்சயம் பரிசிலீக்க வேண்டும். மாறாக வெற்று வன்மமும் வசையும் இருந்தால் கவலையே படாமல் அவற்றை காலால் உதறி விட்டு போய்க் கொண்டே இருக்கலாம். இந்த வகையில் ‘ரோஸ்டிங் டாஸ்க்கை’ பலரும் தவிர்க்க நினைத்தது அல்லது பயந்தது அநாவசியம்.

“விக்ரமனும் அசிமும் வாக்குவாதம் செய்யும் போதெல்லாம் எனக்கு பாயின்ட்டு நிறைய தோணும்” என்றார் அசல். (யாருக்கு சார்பாக தோன்றும் என்பது வெளிப்படை). “ஆனா உள்ளே இருக்கும் போது அதெல்லாம் வந்திருக்காது” என்று டைமிங்கில் புகுந்து கிண்டலடித்தார் கமல். “நல்லவேளை, கூண்டுல போட்ட டாஸ்க்ல நான் இல்லை. என்னை எப்படி மடிச்சு உள்ளே வைக்க முடியும்” என்று ராம் சொல்ல சபை கலகலத்தது.

அசல்

“ஓகே.. இந்த பதினோரு பேருக்கும் இன்னொரு வாய்ப்பு.. ஏதாவது ஒரு விஷயம் தவறான புரிதலுடன் அமைந்து விட்டது. அதை தெளிவுப்படுத்த விரும்பினால் இப்போது செய்யலாம்’ என்று ஆரம்பித்து வைத்தார் கமல். முதலில் எழுந்த அசல், ‘நிவாவுடனான நட்பு வெளியில் எப்படியெல்லாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது’ என்பதை வலியுடன் சொன்னது அருமை. ஓர் இளைஞனும் இளைஞியும் நட்புணர்ச்சியுடன் கையைப் பிடித்துக் கொண்டு பேசினாலே அவர்களை படுக்கையறைக்குள் தள்ளி வம்பு பேசும் பழமைவாத மனங்கள், இளைய தலைமுறையினரைப் புரிந்து கொள்ள வேண்டிய சமயம் இது.

தன்னுடைய முறை வரும் போது இதையே நிவாவும் சொல்லி கண்கலங்கினார். அது நட்போ அல்லது காதலோ, அது அவர்களுக்கு இடையேயான அந்தரங்கமான உறவு. இதை மற்றவர்கள் முடிவு செய்து வம்பு பேசுவது முறையும் அல்ல. நாகரிகமும் அல்ல.

“என்னோட ஹெல்த் கண்டிஷனை வெச்சு நிறைய கிண்டல் பண்ணாங்க. உள்ளே வந்து இருந்து பார்த்தாதான் இதன் ஹீட் தெரியும்” என்று ராம் சொன்னது உணர்வுப்பூர்வமானதாக இருந்தது. ‘இந்த நிகழ்ச்சியில் இருந்த போது என் அம்மா பத்திதான் நிறையப் பேசியிருக்கேன். எங்க அப்பா கிட்ட அதைப் பத்தி சிலர் விசாரிச்சிருக்காங்க” என்று தனலஷ்மி வருத்தத்துடன் சொன்னார். ஆண்கள் இதை ஒப்புக் கொள்ள வெட்கப்படவே வேண்டாம். ஒரு குடும்பம் தடையின்றி இயங்குவதற்கு பெண்கள்தான் பிரதான காரணம். என்னதான் தியாகம் செய்தாலும் ஆண்கள் சைடு கேரக்ட்டர்கள்தான். உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் இதிலிருக்கும் உண்மை புரியும்.

மகேஸ்வரி

“அசிம் கூட நடந்த பிரச்சினைகளை என்னால் தீர்க்க முடியாமப் போச்சு. இந்தச் சமயத்தில் அதற்கான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று சொன்ன மகேஸ்வரி, அசிமை அரவணைத்துக் கொண்டது சிறப்பான காட்சி. பொம்மை டாஸ்க்கில் ஷெரினா மயக்கம் அடைந்ததை வைத்து ‘டிராமா க்யூன்’ என்று பலரும் இணையத்தில் கிண்டலடித்தார்கள். ஆனால் அவரின் ஆரோக்கியம் தொடர்பான சந்தேகத்தின் பலனை அளித்துதான் ஆக வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையில் எழுதியிருந்தேன். ‘நான் நடிக்கலைங்க’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார் ஷெரினா.

எனக்கு பிரெண்ட்ஸ் இல்லைன்ற மாதிரி வீட்டுக்குள்ள பேசிட்டேன். நான் வெளியே போன போது அதனால அவங்க என் கூட பேசலை’ என்று கண்கலங்கச் சொன்னார் சாந்தி. பிக் பாஸ் வீட்டின் அழுத்தம் பற்றி வெளியில் இருப்பவர்களால் கூட உணர முடியும். அந்தச் சூழலில் பேசிய பேச்சை வைத்து, நட்பிலிருந்து ஒதுங்கியிருப்பவர்கள் உண்மையான நண்பர்கள்தானா? புரிதலுடன் சாந்தியின் நண்பர்கள் மீண்டும் இணையட்டும்.

‘இந்த சீசனின் சிறந்த ‘கண்டுபிடிப்பு’ யார்?’

ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல் “ஓகே.. அடுத்த டாஸ்க். இந்த சீசனின் சிறந்த ‘கண்டுபிடிப்பு’ யார்?’ என்று சொல்லுங்கள்” என்று ஆரம்பித்தார். இதில் பலரும் ஷிவினின் பக்கம் கைகாட்டியதால் உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ந்து போய் உடைந்து அழ ஆரம்பித்தார் ஷிவின். ஆம், ஆரம்ப வாரத்தில் ஷிவினைப் பார்க்கும் போது, மிக விரைவில் வெளியேறி விடக்கூடிய போட்டியாளராக தென்பட்டார். முன்கோபம், தனித்திருத்தல், ஒப்பனையில் மட்டும் ஆர்வம் என்று பல எதிர்மறையான குணாதிசயங்கள் அவரிடம் இருந்தன.

ஆனால் மிக விரைவில் சுதாரித்துக் கொண்டு, சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு படிப்படியாக முன்னேறி பிரமிக்க வைத்தார். கோபத்தில் தான் கத்துவது பலவீனம் என்பதையும் இடையில் புரிந்து கொண்டார். ஒரு டாஸ்க்கை சரியாகப் புரிந்து கொள்வது, விளையாடிய பின், சண்டையில் ஆழ்ந்து விடாமல் உணர்ச்சிரீதியான பிணைப்பை துண்டித்துக் கொள்வது, முதிர்ச்சியாகப் பேசுவது என்று பல விதங்களில் அவரின் வளர்ச்சி இருந்தது.

ஷிவின்

ஆனால் எல்லாவற்றையும் மீறி ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். LGBT எனப்படும் மாற்றுப்பாலின சமூகத்தினர் மீது, பொதுச்சமூகத்திற்கு பல கற்பிதங்களும் ஒவ்வாமைகளும் மனவிலகலும் இருக்கின்றன. இயற்கைக்கு முரணான விஷயம் என்கிற தவறான புரிதலும் இருக்கிறது. ஆனால் இப்போது அதில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களையும் இயல்பாக மையச்சமூகத்தில் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் கடக்க வேண்டிய தூரம் இன்னமும் அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில், பிக் பாஸ் வீட்டில் அனைவருமே ஷிவினை ஒரு ‘பெண்ணாகத்தான்’ உணர்ந்தார்கள். அணுகினார்கள். எவருமே வித்தியாசமாகப் பார்க்கவில்லை. மறைமுகமாகக் கூட கிண்டலடிக்கவில்லை. இந்த normalization-மும் மாற்றமும் மிக முக்கியமானது.

மாற்றுப் பாலின சமூகம் தொடர்பாக நாம் அறிந்திருப்பது மிகச் சொற்பமே. அதிலேயே ஏராளமான உட்பிரிவுகள் இருக்கின்றன. இதை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் கெளரிஷங்கர் எழுதிய ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ என்கிற நூலை நீங்கள் வாசிக்க வேண்டும். ‘ஒரு மாபெரும் புரட்சி நடந்துள்ளது’ என்று விக்ரமன் சொன்ன போது ஷிவினால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாதது நெகிழ்வான காட்சி.

‘சிறந்த கண்டுபிடிப்பு’ என்பதையும் தாண்டி, ஆறாம் சீசனின் டைட்டில் வின்னர் என்பதற்கும் கூட ஷிவின் தகுதியானவரே. முந்தைய சீசனில் கலந்து கொண்ட நமீதாவால் இந்த மாற்றம் நடக்கக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏனோ அவர் விரைவில் வெளியேறி விட்டார். ஷிவினால் இந்த சமூக மாற்றம் நடந்தால் அது மகிழ்ச்சியே.

ஹவுஸ்மேட்ஸ்

எல்லோருமே சபையில் இருந்தவர்களைக் குறிப்பிட்ட போது அசல் மட்டும் ‘ஜனனியை’ குறிப்பிட்டது சிறப்பு. ஷிவினுக்கு அடுத்தபடியாக தனலஷ்மியின் பெயரும் அதிகம் சொல்லப்பட்டது. ‘எந்தவித மீடியா பின்புலமும் இல்லாமல் பிக் பாஸில் கலந்து கொள்வதை ஒரு முக்கியமான லட்சியமாக எடுத்துக் கொண்டு அதற்காக பல்வேறு விதங்களில் உழைத்து இந்த வீட்டிற்கு வந்தது தனலஷ்மியின் பலம்’ என்று அசிம் சொன்னது உண்மை. ஆண்களுக்கு நிகராக, ஏன் சமயங்களில் அதைத் தாண்டியும் டாஸ்க்குகளில் இறங்கி விளையாடி கெத்து காட்டினார் தனலஷ்மி. ஆனால் முன்கோபமும் அகங்காரமும் அவருக்கு பெரிய பலவீனமாக போய் விட்டது. ‘நான் வீட்டுக்குப் போகணும்’ என்று அவ்வப்போது புலம்பியதும் கூட.

ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘நாமினேட் ஆனவங்க ஒண்ணா உக்காருங்க’ என்று வழக்கமான வசனத்தைச் சொல்லி விட்டு ‘யாரு?’ என்று அடுத்த கேள்வியையும் ஆரம்பித்தார். எஞ்சியிருந்தவர்கள் மூவர். ஏடிகே, மைனா மற்றும் கதிரவன். ‘நான்தான்’ என்று மூவருமே சொல்ல “இது போட்டியா ஆயிடும் போலயே. சரி. போட்டியின் மூலமே அதைத் தெரிவிப்போம்’ என்ற கமல், ‘எல்லோரும் கார்டன் ஏரியாவிற்கு வாங்க” என்றார். ‘நீங்களும் வருவீங்களா சார்’?’ என்று நடுபென்ச் மாணவனின் ஆர்வத்தை வழக்கம் போல் காட்டினார் அசிம்.

பொங்கல் சமயம் என்பதால் மூன்று பானைகளைக் கட்டி உறியடி விழா நடத்தப்பட்டது. ‘யார் எவிக்ட் ஆகிறாரோ’ அவரின் பானையில் இருந்து சிவப்பு ரோஜாக்கள் விழும். ‘ஒரே சமயத்தில் அடிங்க’ என்று கமல் சொல்லியும் ஏடிகே சற்று தாமதம் செய்தார். கதிரவன், மைனாவின் பானையில் இருந்து பூக்கள் விழவில்லை. எனவே ‘ஏடிகே எவிக்ட்டட்’ என்பது பானை உடைபடாமலே தெரிந்து விட்டது. ஏமாற்றத்தை உடனே மறைத்துக் கொண்டு ‘நான் சந்தோஷமாத்தான் போறேன்.. இவ்வளவு நாள் நான் இருந்ததே வெற்றிதான்’ என்கிற சம்பிரதாயமான சொற்களோடும் புன்னகையோடும் விடைபெறத் தயாரானார் ஏடிகே.

அசிம் – ஏடிகே

“நீ வெளியே போற போது மட்டும் பாரு.. மத்தவங்களும் இருக்காங்க” என்று அமுதவாணன் சொன்னது ஒரு நல்ல ஆறுதல். “உனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கலன்றது பெரிய ஏக்கமா இருந்தது. வெளிய போன பிறகு பாரு.. நிறைய பாடல்கள், படம் செய்யப் போறே” என்று உணர்ச்சிப்பூர்வமான வாழ்த்தைச் சொல்லி மகிழ்ந்தார் அசிம். ‘ஆல் தி பெஸ்ட்’ என்கிற ஆசியோடு வழக்கமாக நிறுத்திக் கொள்கிற பிக் பாஸ் கூட, கூடுதலான வார்த்தைகளில் ஏடிகேவின் கலைப்பயணத்தை வாழ்த்த, வீட்டிற்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கண்கலங்கினார் ஏடிகே.

‘செல்லாத பணம்’ – இமையத்தின் விருது பெற்ற நாவல்

பிரேக் முடிந்து திரும்பிய கமல், புத்தகப் பரிந்துரை பகுதிக்கு வந்தார். இந்த வாரம் அவர் பரிந்துரைத்த நூல், இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’. ஒரு மருத்துவமனையில் நிகழும் சம்பவங்களை அதிகமாக வைத்து பின்னப்பட்ட நாவல் இது. ஆணவக்கொலை என்னும் விபரீதத்தை உயிர் அறுக்கும் வார்த்தைகளால் சித்தரித்திருப்பார் இமையம். ‘யதார்த்தவாத எழுத்திற்கு என்றும் அழிவில்லை’ என்பதை நிரூபிப்பது இமையத்தின் எழுத்து. ‘எளிய மக்களின் வாழ்க்கையைச் சொன்ன ஜெயகாந்தன் போன்றவர்களின் தொடர்ச்சி இமையம்’ என்று பாராட்டுரை வழங்கினார் கமல். சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் இது.

ஏடிகே

“வாங்க ஏடிகே.. ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தீங்க. போயிடுவேன். போயிடுவேன்..னு. இன்னிக்கு நடந்துடுச்சு..” என்று சிரித்தபடி ஏடிகேவை மேடைக்கு வரவேற்ற கமல், பயண வீடியோவைக் காட்டினார். அந்த வீடியோ உணர்ச்சிகரமாக இருந்தது. “என்னோட அடையாளத்திற்காக நிறைய முயற்சி செஞ்சிருக்கேன். தோற்றம் காரணமாக நிறைய நிராகரிப்பைச் சந்திச்சிருக்கேன். ரஹ்மான் வரை பாடியும் இன்னமும் அங்கீகாரம் கிடைக்கலை. பிக் பாஸ் தந்த வெளிச்சம் காரணமாக மக்கள் என்னை வரவேற்பாங்கன்னு நம்பறேன்” என்று நெகிழ்ந்த ஏடிகேவிடம் “இந்தக் கோலத்துல உங்களை மேடையில் பார்க்க விரும்பலை” என்ற கமல், தன் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட ஒரு தொப்பியை பரிசளித்து மகிழ்ந்தார்.

செல்லாத பணம் – இமையம்

“பிக் பாஸ் டைட்டிலை விடவும் இது எனக்குப் பெரிய பரிசு” என்று உணர்ச்சிவசப்பட்டார் ஏடிகே. சிறப்பான தோற்றத்துடன் ஏடிகே மேடையில் நிற்க வேண்டும் என்கிற கமலின் நோக்கம் பாராட்டத்தக்கதுதான். ஆனால் “இந்தத் தோற்றத்தில் எனக்கு இழிவில்லை. வெற்றி மேடையிலும் இப்படித்தான் நிற்பேன். வெளியில் சென்றாலும் தொடர்வேன்” என்று மகிழ்ந்து சொன்ன ஏடிகேவிடம், அதை மறைத்துக் கொள்வதற்கான சமிக்ஞையை கமல் தந்தது, ஒரு சிறிய நெருடல். சினிமாவில் எத்தனையோ வித்தியாசமான ஒப்பனைகளை ஏற்றவருக்கு இது புரியாதா?! ஒரு ரகளையான பாடலுடன், சக போட்டியாளர்களை வாழ்த்தி விட்டு விடைபெற்றார் ஏடிகே. “இன்னமும் ஒரு வாரம்தான் இருக்கு. ஜாலியா இருங்க” என்கிற வாழ்த்துரையுடன் கமலும் விடைபெற்றார்.

கார்டன் ஏரியாவில் இளநீர், கரும்பு என்று பாரம்பரிய உணவுகளோடு மஞ்சள் கலந்த நீரும் இருந்தது. ஆடை பாழாகி விடக்கூடாது என்கிற ஜாக்கிரதையுடன் முதலில் உணவை ரவுண்டு கட்டி விட்டு பிறகு மஞ்சள் நீரை ஒருவருக்கொருவர் விசிறியடித்துக் கொண்டு மக்கள் விளையாடியது ஜாலியான காட்சி. இறுதி நாள் வரைக்கும் இந்த மகிழ்ச்சி அந்த வீட்டில் நீடித்திருக்கட்டும்.

ஏடிகே வெளியேறியது பற்றிய உங்களின் கருத்தையும், இந்த சீசனின் சிறந்த கண்டுபிடிப்பு யார் என நீங்கள் நினைப்பவரையும் கமன்ட்டில் பதிவு செய்யுங்கள் மக்களே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.