தென் தமிழகத்தின் நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்ணன் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 182வது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் தேனி மக்கள் பென்னிகுவிக்கை கடவுளாக நினைத்து பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கர்னல் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கம்பம் தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ மகாராஜன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணன், மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆகியோர் பென்னிகுவிக் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி “தென்தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நிலவும் பிரச்சனையை நம்முடன் நட்புடன் இருக்கும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது. தேனி மத்திய பேருந்து நிலையத்தில் பென்னிகுவிக் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.