திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திர அக்கடமியினால் 2023 ஜனவரி 09 முதல் 11 வரை நடத்தப்பட்ட 5 நாடுகளுக்கிடையிலான தளபதிகள் கிண்ண படகுசவாரிப் போட்டியில் எழிமலை இந்திய கடற்படை அக்கடமியின் அதிகாரி ஒருவரையும் மூன்று இளம் கடற்படை வீர்ர்களையும் கொண்ட படகோட்டல் அணியினர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
2. இப்போட்டியின் வெற்றியாளர்கள் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களால் கௌரவிக்கப்பட்டதுடன் 2023 தளபதிகள் கிண்ணமும் அவரால் வழங்கப்பட்டது. இதேவேளை 2023 ஜனவரி 12 ஆம் திகதி இந்த அணியினரைச் சந்தித்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் இச்சாதனைக்காக அவ்வணியினைரை பாராட்டியிருந்தார்.
3. நட்புறவுப்பாலத்தை கட்டியெழுப்புவதற்கான இந்திய கடற்படையின் முயற்சிகளுக்கு அமைவாகவே இந்திய கடற்படை அக்கடமியின் படகோட்டல் அணியினர் இந்த தளபதிகள் கிண்ண படகோட்டல் போட்டியில் கலந்துகொண்டனர். இதேவேளை திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் சமுத்திர அக்கடமியிலிருந்து இருந்து அதிகாரி ஒருவரும் இரண்டு இளம் கடற்படை வீரர்களும் அடங்கிய அணி, 2022 டிசம்பர் 04 முதல் 10 வரை இந்திய கடற்படை அக்கடமியால் நடத்தப்பட்ட அட்மிரல் கிண்ணத்துக்கான படகோட்டல் போட்டியில் பங்கேற்றிருந்தது.
அத்துடன் 2022 டிசம்பர் 15 முதல் 2023 ஜனவரி 15 வரை இலங்கை கடற்படையைச் சேர்ந்த அணியினருக்கு சமுத்திர படகோட்டல் பயிற்சிகள் இந்தியாவில் வழங்கப்பட்டன. மேலும், 2022 மார்ச் 10 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் சமுத்திரங்களில் பயணிக்கும் ஐந்து இந்திய கடற்படை படகுகள் (INSVs) இலங்கைக்கு விஜயம் செய்திருந்தன, இவிஜயத்தின்போது இலங்கை கடற்படை வீரர்களுக்கு படகோட்டல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, மார்ச் 2022 இல் இந்தியக் கடற்படையால் படகுகளுக்கான பொறிகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் ‘அயலுறவுக்கு முதலிடம்” கொள்கையால் உந்தப்பட்டதன் விளைவாக, படகோட்டல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையேயான ஒன்றிணைந்த நடவடிக்கைகள் தோழமை, சகோதரத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உள்ளுணர்வை மேலும் வலுவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். .
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
13 ஜனவரி 2023