அமித் ஷா கொடுக்கும் அசைன்மென்ட்… ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி விசிட்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை பெரும் சர்ச்சையாகி, இன்றளவும் விவாதப் பொருளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. உடனே முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து சபையை அதிரவைத்தது மட்டுமின்றி, ஆளுநர் குட்பை சொல்லும் அளவிற்கு கொண்டு போய்விட்டது. இதில் தமிழ்நாடு அரசு மீதும், ஆளுநர் ஆர்.என்.ரவி மீதும் மாறி மாறி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முதல் டெல்லி பயணம்

இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு டெல்லி புறப்பட்டு சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அப்போது யாரை சந்தித்தார்? அவரது அடுத்த திட்டம் என்ன? எனப் பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால் இந்த பயணம் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. அரசு நிகழ்ச்சிக்காக செல்கிறார். வேறெதுவும் கிடையாது என வழக்கமான பதில் ஆளுநர் தரப்பில் இருந்து வெளியானது.

தமிழ்நாடு சர்ச்சை

மறுபுறம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்த விஷயங்கள் குறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து திமுக எம்.பிக்கள் முறையிட்டனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய சீலிடப்பட்ட கவரை ஒப்படைத்தனர். இதற்கிடையில் ஆளுநர் மாளிகையின் பொங்கல் விழா அழைப்பிதழில் ’தமிழ்நாடு’ என்ற பெயரை பயன்படுத்தப்படாதது, ஆளுங்கட்சியினர் புறக்கணிப்பு, மாநிலம் தழுவிய போராட்டங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனம் என அனல் பறந்தது.

ஆளுநர் நடவடிக்கையில் மாற்றம்

டெல்லி சென்று திரும்பிய பின்னர் ஆளுநரின் நடவடிக்கைகளில் மாற்றம் நிகழும் எனப் பல்வேறு தரப்பினரும் கூறினர். ஆனால் அப்படியான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இதேபோல் திமுகவினரின் அட்டாக் மனநிலையும் மாறவில்லை. இந்த சூழலில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

உளவுத்துறை ரிப்போர்ட்

ஆளுநருக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் விரிவாக பதிவு செய்து ரிப்போர்ட் ஒன்றை மத்திய உளவுத்துறை தயாரித்ததாக தகவல் கசிந்தது. இது ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சட்ட நிபுணர்கள் உடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இரண்டாவது டெல்லி பயணம்

இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இரண்டாவது முறையாக டெல்லி பயணத்திற்கு தயாராகி வருகிறார். இம்முறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க பேசவுள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவாக பேசப்படலாம்.

அமித் ஷா அசைன்மென்ட்

அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும்? மாநில அரசு உடனான நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்? ஆளுநராக செய்ய வேண்டிய விஷயங்கள்? உள்ளிட்டவை குறித்து சில அசைன்மென்ட்கள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.