இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்; பிரதமர் மோடி சம்மதிக்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி சம்மதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு சம்மதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்சினைகளாக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும். இதுதான் நான் இந்திய தலைமைக்கு விடுக்கும் செய்தி. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்காற்ற முடியும்.

காஷ்மீரில் நாளுக்கு நாள் மனித உரிமை மீறல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமை அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ இந்தியா கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்துவிட்டது. இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்தியா உலகுக்கு அறிவிக்க வேண்டும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். ஒன்றாகத்தான் வாழ்ந்தாக வேண்டும். நாட்டில் எந்த அளவுக்கு அமைதி இருக்கிறதோ அந்த அளவுக்கே முன்னேற்றம் இருக்கும். இரு நாடுகளும் சண்டையிட்டுக்கொண்டே இருந்தால் நேரமும் பணமும்தான் வீணாகும். இந்தியாவுடன் நாங்கள் 3 போர்களை சந்தித்துவிட்டோம். இந்த போர்கள் பாகிஸ்தானியர்களுக்கு கூடுதலான துன்பத்தையும், வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையுமே அளித்திருக்கின்றன. நாங்கள் எங்களுக்கான பாடத்தை தற்போது கற்றுக்கொண்டுவிட்டோம். எனவே, அமைதியை விரும்புகிறோம்.

எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை நேர்மையான முறையில் தீர்க்கும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. ஏழ்மையை ஒழித்து வளமையை பெருக்க விரும்புகிறோம் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை நாங்கள் எங்கள் மக்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். குண்டுகள், வெடிமருந்துகள் ஆகியவற்றுக்காக நாங்கள் எங்கள் சக்தியை வீணடிக்க விரும்பவில்லை.” இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.