'இன்னும் 400 நாள் தான் இருக்கு.. ஒருத்தரும் மிஸ் ஆக கூடாது..!' – பிரதமர் மோடி ஆர்டர்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 400 நாட்களே உள்ளன என்றும், அனைத்து வாக்காளர்களையும் பாஜக நிர்வாகிகள் சென்று சந்திக்க வேண்டும் என்றும், பாஜகவினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாஜக, இந்த முறை ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு முறையும் நாடு முழுவதும் வீசிய மோடி அலையே வெற்றிக்கு காரணம் என்றும் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தல் பாஜகவுக்கு மிகுந்த சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, நடப்பு 2023 ஆம் ஆண்டில் மட்டும், கர்நாடகா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்கள் முன்னோட்டமாக பார்க்கப்படும் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம் இன்று நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவராக 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஜே.பி.நட்டா தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்திய தகவல்கள் குறித்து, மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ்செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வரும் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் இருப்பதால், அதற்கு இப்போதே தயாராக வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல புதிய நிர்வாகிகள் நியமிப்பது அவசியம். மக்களுக்கு சேவை செய்ய அனைத்தையும் செய்ய வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும். 18 – 25 வயது வரை உள்ள இளம் வாக்காளர்களை கவர்வது, குறிப்பாக எல்லை கிராமங்களில் பாதுகாப்பையும், கட்சியையும் வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் இலக்காக கொண்டு செயல்பட உறுதி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.