கொலிஜியம்: உச்சகட்டமாக முட்டி மோதும் கிரண் ரிஜிஜு… சாதிக்குமா பாஜக அரசு?!

உச்ச நீதிமன்றத்துக்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் நடைபெற்றுவருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் என்ற குழு, நீதிபதிகள் நியமனம் தொடர்பான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பும். அவர்களை மத்திய அரசு நீதிபதிகளாக நியமிக்கும். இந்த முறை 1998-ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்துவருகிறது.

பிரதமர் மோடி – உச்ச நீதிமன்றம்

கொலிஜியம் நடைமுறையை மத்திய பா.ஜ.க அரசு விரும்பவில்லை. 2014-ம் ஆண்டு, மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன், கொலிஜியம் முறைக்கு மாற்றாக, ‘தேசிய நீதிபதிகள் நியமனக் குழு’ என ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.

அந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய நீதிபதிகள் நியமனக் குழுவை அமைத்து மத்திய அரசு இயற்றிய சட்டத்தை 2015-ம் ஆண்டு ரத்து செய்தது. அதிலிருந்து நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே உரசல் இருந்துவருகிறது.

இந்த நிலையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அனுப்பிய பரிந்துரையை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு கிடப்பில் போட்டதால், உச்ச நீதிமன்றம் கோபமடைந்தது. ‘இவ்வாறு தாமதித்தால் நீதித்துறையால் எப்படி செயல்பட முடியும்..’ என்று உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு கொந்தளித்தது.

உச்ச நீதிமன்றம்

இந்தப் போக்கு தொடரும் நிலையில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கொலிஜியத்துக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்தார். கடந்த நவம்பர் 25-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரண் ரிஜிஜு, “கொலிஜியம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு அந்நியமான ஓர் அமைப்பு. கொலிஜியத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே நீதிபதிகளாக ஆக வேண்டும், கொலிஜியம் அமைப்புக்குத் தெரிந்தவர்கள் அல்ல..’ என்று பேசினார்.

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்த வழக்கு கடந்த நவம்பர் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கொலிஜியத்தின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு இழுத்தடித்துவருதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், “மத்திய அரசு இவ்வாறு காலம் தாழ்த்துவது ஏமாற்றம் அளிக்கிறது. கொலிஜியம் பரிந்துரையை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போட்டிருப்பதன் மூலம் மத்திய அரசு எல்லை மீறுகிறது. நீதிமன்றம் சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்’ என்று நீதிபதிகள் காட்டமாகக் கூறினர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அண்மையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்-க்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ‘நீதிபதிகள் நியமனத்துக்கான தேர்வில் பொறுப்பேற்றல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் கொலிஜியங்களில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து, ‘மத்திய அரசின் பரிந்துரை அபாயகரமானது. நீதிபதிகள் நியமனத்தில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது’ என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘நீதிமன்றங்களைக் கைப்பற்றும் நோக்கில் நீதித்துறையை மத்திய அரசு மிரட்டுகிறது’ என்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

ஜெய்ராம் ரமேஷ்

தேசத்தினை தாங்கிப்பிடிக்கும் இரு பெரும் அமைப்புகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.