விருத்தாசலம்: சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், குருவாயூர் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விருத்தாசலம் வழியாக பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இதனால் தினசரி 60க்கும் மேற்பட்ட ரயில்கள் விருத்தாசலம் வழியாக சென்று வருகின்றன. மேலும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து ஆத்தூர், சேலம் மற்றும் கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளுக்கும் இவ்வழியாக ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 4 நடைமேடைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் தினமும் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
ஆனால் இங்கு ரயில் பயணிகளுக்கு போதுமான குடிநீர், கேண்டீன், கழிவறை, பாதுகாப்பு, பிளாட் பாரங்களில் ரயில் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் மின்விளக்கு தகவல் பலகை எரியாதது, நடைமேடைகளில் மேற்கூரை இல்லாதது என பல்வேறு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பலர், ரயில் நிலையத்துக்குள் வந்து செல்கின்றனர். இதனால் செயின் பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி செய்பவர்கள், மிக சுலபமாக ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி செல்கின்றனர்.
பயணிகள் மற்றும் நடைமேடையில் நடந்து செல்பவர்களிடம் செயின் பறிப்பு சம்பவம் பலமுறை நடந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 5 வருடத்துக்கு முன்பு ரயிலின் மேற்கூரையில் ஓட்டைப்போட்டு 570 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளை போன சம்பவம் நாட்டையே உலுக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதுவரை முழுமையாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதுகுறித்து பூதாமூர் பயணி முத்து கூறும் போது, ரயில் நிலையத்துக்குள் குரங்குகள், நாய்கள், பன்றிகள் என விலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. உணவுக்கு வழியின்றி தவிக்கும் அவை, ரயிலில் வரும் பயணிகளிடம் இருக்கும் உணவுகளை பறித்து செல்கின்றன.
அப்போது சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உணவு பொருட்கள் மட்டுமின்றி பையில் கொண்டு வரும் அனைத்து பொருட்களையும் குரங்குகளிடம் பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் குரங்குகள் கடித்து பலர் காயம் அடைந்துள்ளனர். மேலும் குரங்குகள் துரத்தும் போது பயணிகள் ரயில் தண்டவாளத்தில் தவறி விழும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. அதுபோல் நடைமேடைகளில் பாதியளவு தூரம் மட்டுமே மேற்கூரைகள் உள்ளன. பாதி அளவுக்கு மேற் கூரை இல்லாமல் இருப்பதால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் திறந்து வெளியில் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து முன்னாள் ரயில்வே ஊழியரான இருதயசாமி கூறும் போது, விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் ரயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு வெளியே நின்று செல்கிறது.
அதனால் பயணிகள் ரயில் நிலையத்துக்கு செல்ல தனியாக ஆட்டோக்களில் செல்லும் நிலை உள்ளது. மேலும் மெயின் ரோட்டில் இருந்து ரயில் நிலையம் வரை செல்லும் பகுதியில் அடிக்கடி மின்விளக்குகள் பழுதாகி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனால் அப்பகுதியில் மின்விளக்குகளை சரிசெய்து மேலும் கூடுதல் மின்விளக்குகள் பொறுத்த வேண்டும். 2 டிக்கெட் கவுண்டர்கள் இருந்த போதிலும் எப்போதும் ஒரு டிக்கெட் கவுண்டர் மூடியே இருக்கும். இதனால் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி டிக்கெட் எடுத்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. விருத்தாசலத்திலிருந்து உளுந்தூர்பேட்டை மார்க்கம் செல்லும் பேருந்துகளும், உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் மார்க்கமாக வரும் பேருந்துகளும் விருத்தாசலம் ரயில் நிலையத்துக்குள் சென்று திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.