புதுடில்லி, ‘முறையான பள்ளிக் கல்வி நடைமுறையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைப்பதற்காக, அவர்களையும் உள்ளடக்கிய பாடத்திட்டம், பாலின பாகுபாடு அற்ற சீருடை, பாதுகாப்பான கழிப்பறை வசதி பள்ளிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்’ என, என்.சி.இ.ஆர்.டி., வலியுறுத்தி உள்ளது.
பள்ளிக் கல்வியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாததால், அவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர்.
இதனால், அவர்களின் பள்ளிக் கல்வி பாதியில் நிற்கிறது. எனவே, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பள்ளிக் கல்வியை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், 16 நபர் அடங்கிய கமிட்டியை உருவாக்கியது.
இந்த கமிட்டி, ‘பள்ளிக்கல்வி செயல்முறைகளில் மூன்றாம் பாலினத்தவர்களின் பிரச்னைகளை ஒருங்கிணைத்தல்’ என்ற தலைப்பில் வரைவு கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் விபரம்:
பள்ளியில் பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, குறிப்பாக ஆறாம் வகுப்பில் இருந்து சீருடை விஷயத்தில் பிரச்னை எழுகிறது. அவர்களுக்கான சீருடைகளை அணிவது அவர்களுக்கு வசதியாக இருப்பதில்லை. எனவே, பாலின பாகுபாடற்ற சீருடைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
பல பள்ளிகளில், மாணவ – மாணவியர் அனைவருமே அணியும் வகையில் பேன்ட் – சட்டைகளை அறிமுகம் செய்துள்ளனர். இது, பாலின சமத்துவத்துடன் கூடிய சீருடையாக உள்ளது. இதுபோன்ற ஆடைகளை அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான பாடங்களை, தற்போதுள்ள பாடப் புத்தகங்களில் கூடுதலாக இணைக்க வேண்டும்.
மேலும், நாடகங்கள், விவாதங்கள், பேச்சு, கட்டுரை போட்டிகள் மற்றும் குறும்படங்கள் வாயிலாக, மூன்றாம் பாலினத்தவர்களை நாம் நடத்த வேண்டிய விதம் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் மூன்றாம் பாலினத்தவர்கள் அச்சமின்றி கல்வி கற்கும் சூழலை உருவாக்க வேண்டும். அவர்களும் மற்றவர்களை போல இயல்பாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அவர்களையும் உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்