24 மணி நேரமும் பயணிகள் கூட்டத்தால் அலைமோதும் திருச்சி விமான நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். அதனால், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பர்.
இந்நிலையில், திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார்.
சற்று நேரத்தில் வெடிக்கப் போகிறது என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும், விமான நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக, மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் திருச்சி மாவட்ட வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் போலீசார், மோப்பநாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட நவீன கருவிகள் கொண்டு சோதனை செய்தனர்.
சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, விமான நிலைய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
newstm.in