கர்நாடாகாவில், பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 224 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடைசியாக, கடந்த 2013 – 2018 ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அதன்பிறகு கர்நாடக தேர்தலில் தனித்த வெற்றி வாய்ப்பைப் பெற முடியவில்லை. இந்த தேர்தலில் வெல்ல, தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, `மக்கள் குரல்’ என்னும் யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறது. இதில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

‘கர்நாடகம்’ – காங்கிரஸ் யாத்திரை விவரம்!
1924-ம் ஆண்டு மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக பெலகாவி மாவட்டத்தில் தான் பொறுப்பேற்றார். இதனால் காங்கிரஸின் மக்கள் குரல் யாத்திரை (Praja Dhwani Yatra) ஜனவரி 11-ம் தேதி அங்கிருந்து தொடங்கியது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவக்குமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஒரே வாகனத்தில் பயணித்து இந்த யாத்திரையை நடத்தி வருகின்றனர்.வரும் 29-ம் தேதி வரை இந்த யாத்திரை 22 மாவட்டங்களைக் கடந்து பெங்களூருவில் நிறைவடையும். ஆனால், என்ன காங்கிரஸ் யாத்திரை நடக்கிறதா? என கேட்கும் நிலையில்தான் அவர்களின் யாத்திரை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

எப்போதும் ஒரு செயலை தொடங்கும் போது கர்நாடக காங்கிரஸிடம் இருக்கின்ற வேகம் படிப்படியாக குறைந்துவிடுகிறது. இந்த யாத்திரையின் தொடக்கத்தின் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்டது. பின்பு பிரியங்கா காந்தி வருகை தந்து, பெண்களைக் கவரும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 தருவதாக வாக்குறுதி வழங்கினார். இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் யாத்திரை என்னானது என தெரியவில்லை.
கடந்த முறை முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி நடத்திய ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடந்தபோது மாநில காங்கிரஸின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டன. ஆனால், மெல்ல மெல்ல தங்கள் வேகத்தில் சுணக்கம் காட்ட தொடங்கினர். குறிப்பாக, டெல்லியிலும் இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கர்நாடகத்தில் காங்கிரஸ் மெச்சிக்கும் அளவு இல்லை என்ற கூறப்பட்டது. அதன்பிறகுதான் இந்த யாத்திரைத் தொடங்கப்பட்டுள்ளது. ஆனாலும், 6 நாட்களாக நடந்து வரும் யாத்திரை மக்கள் மத்தியில் போய் சேரவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

`அடிமட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் இல்லை!’
பாஜக மற்றும் ஜனதா தளம் சார்பாகவும் யாத்திரைகள் நடந்து வருகிறது. அதிலிருந்து தங்களைத் தனித்துவப்படுத்த காங்கிரஸ் பெரியதாக முயற்சிக்கவில்லை. இருப்பினும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக வரிசையாக செய்திருக்கும் ஊழல் காங்கிரஸுக்கு ப்ளஸ் பாயின்டாக மாறும் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்து. குறிப்பாக, பிட்காயின், பி.எஸ்.ஐ ஊழல், 40% கமிஷன் குற்றச்சாட்டு என பாஜக அரசுக்கு எதிராக அடுக்கடுக்காகப் பல ஊழல்கள் குற்றக்சாடுகளைக் காங்கிரஸ் வைத்தது. இந்த ஊழல்களை உண்மையாக்கும் வகையில், ஒப்பந்ததாரர்கள் சிலர் அதிகாரிகளின் தொல்லைத் தாங்காமல் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டது மக்களுக்கு பாஜக மீதிருக்கும் அதிருப்தியை அதிகபடுத்தியது.

இதை மனதில் வைத்து காங்கிரஸ் மக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மற்ற இந்துத்துவா விவகாரங்களில் அரசை விமர்சிக்காமல், நிர்வாக எதிர்ப்பு அலை, வளர்ச்சியில் பின்தங்கிய நிலை, ஊழலை விவாதத்தில் வைப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். இதுதவிர, சாலை பள்ளம், மெட்ரோ தூண் இடிந்து விழுந்தது போன்றவை காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆயுதமாக மாறியுள்ளது. போலவே, தேர்தலில் மக்கள் வாக்குகளைப் பெற இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
இதையெல்லாம் தாங்கள் மேற்கொள்ளும் யாத்திரையில் தலைவர்கள் பேசலாம், ஆனால் அதை மக்களுக்கு எடுத்துச் செல்ல அடிமட்ட அளவில் வேலை பார்க்க காங்கிரஸில் நம்பிக்கையான ஆட்கள் இல்லை என்பது அவர்களுக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், வாக்குச்சாவடி அளவில் வாக்காளர் அமைப்பில் ஆட்கள் பற்றாக்குறை தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவுக்கு வழிவகுக்கும்.

சாதகமாக இருக்கும் கருத்து கணிப்புகள்!
கடந்த ஒரு மாதமாக மேற்கொண்ட பல்வேறு கருத்து கணிப்புகள் காங்கிரஸிற்கு ஆதரவாகவும், பாஜகவிற்கு எதிராகவும் இருக்கிறது. கடந்த முறை 104 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, இந்த முறை 70 இடங்களையும், காங்கிரஸ் 115 இடங்களையும், ஜனதா தளம் 40 இடங்களையும் கைப்பற்றும் என்பது சில கருத்து கணிப்புகளின் முடிவாக இருக்கிறது.

இது காங்கிரஸிற்கு சாதகமான முடிவாகப் பார்க்கப்பட்டாலும், தேர்தல் நடக்க இன்னும் காலம் இருப்பதால், காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறும் என தைரியத்தில் பாஜகவும், நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது. பாஜக நிர்வாக ரீதியில் மண்ணைக் கவ்வியிருந்தாலும் சமூக வாக்குகள் நிச்சயம் காப்பாற்றும் என நம்புகிறார்கள். குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை இந்து விரோதி என விமர்சிப்பதும் அவர்கள் ஆட்சியில் கொண்டுவந்த பசுவதைத் தடுப்புச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், சில பெயர் மாற்றம் என இந்து சென்டிமெட் அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என பெரும் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

அதே போல், பாஜக முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கரிஷ்மா அவர்களுக்கு கை கொடுக்கும். இது பாஜக-வின் அரசியல் திட்டமாக இருக்கிறது. மற்றொரு கூடுதல் நம்பிக்கையகப் பாஜக அரசுக்கு இருப்பது கட்சியின் அடிமட்ட பலம். என்னதான் பா.ஜ.க நிர்வாகத்திற்கு எதிராக பல ஊழல்கள் நடந்தாலும், அடிமட்ட அளவில் கட்சியை நல்ல கட்டமைப்பில் வைத்திருக்கிறது பா.ஜ.க. விளம்பரங்கள் , பூத் அளவில் வாக்காளர்களைக கவரும் முயற்சியைப் பாஜக இப்போதே தொடங்கியுள்ளது.

எனவே, அடிமட்ட அளவில் திட்டமிட்டு பிரசாரம் செய்து வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய செயல்வீரர்கள் காங்கிரஸில் இல்லாமல் இருப்பது, காங்கிரஸிற்குப் பெரும் பின்னடைவுதான். ஆகவே அடிமட்ட ஒழுங்கமைப்பை சீரமைக்காத வரை, காங்கிரஸ் எத்தனை யாத்திரைகள் நடத்தினாலும், தேர்தல் இலவச அறிவிப்புகள் வெளியிட்டாலும் அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியில் அமர்வது பெரும் சவால் என்பதே மாநில அரசியலை உற்று நோக்குவோர்களின் கருத்தாக இருக்கிறது.