திருவாரூர் : காணும் பொங்கலையொட்டி திருவாரூரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ துவக்கிவைத்தார்.
காணும் பொங்கலையொட்டி திருவாரூர் ஆரூரான் விளையாட்டு கழகம் சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 38ம் ஆண்டாக நேற்று இந்த விளையாட்டு விழாவானது தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலும், செயலாளர் செல்வம், பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதனையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியினை திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டிகலைவாணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியை காண கமலாலய குளம் படித்துறைகளில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் விழாக்கோலம் பூண்டிருந்தது.
போட்டி துவக்க நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ், நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவினையொட்டி முன்னதாக காலையில் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெண்கள் தமிழ்நாடு வாழ்க என்று தங்களது வெளிப்பாட்டினை கோலம் மூலம் தெரிவித்திருந்தனர். மேலும் இளைஞர்களுக்கான ஸ்பீடு சைக்கிள் போட்டிகளும், ஸ்லோ சைக்கிள் போட்டிகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான வாலிபர்கள் பங்கேற்றனர். இலக்கை நோக்கி பயணிகள் பரிசுகளை தட்டிச்சென்றனர். தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகளான தப்பாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் களைகட்டியது.
மேலும் மாலையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய என 3 வகையான குதிரை வண்டி ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான குதிரை மற்றும் நாட்டு மாடுகளை பங்கேற்று இலங்கை நோக்கி சென்று வந்து பரிசுகளை தட்டிச்சென்றன. இரு மருகிலும் பார்வையாளர்கள் ஏராளமானோர் திரண்டு ஆரவாரம் செய்ததால் மகிழ்ச்சி களைகட்டியது. நகரின் 4 வீதிகளிலும் நின்றவாறு பொதுமக்கள் போட்டிகளை கண்டு களித்தனர். இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் வழங்கினார்.