`குடிகாரர்கள் இல்லாத தமிழ்நாடாக மாற்ற வேண்டும்!‘ –  Coffee With Collector நிகழ்ச்சியில் பள்ளி மாணவன்

பள்ளி மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக சமீபத்தில் விழுப்புரம் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் `காஃபி வித் கலெக்டர் (Coffee With Collector)’ நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 25 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

Coffee With Collector நிகழ்ச்சி

மாணவர்கள், தங்களின் மன எண்ணங்களையும், குடும்ப சூழலையும், எதிர்கால ஆசையையும் மாவட்ட ஆட்சியருடன் பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், ஆட்சியர் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர், திண்டிவனம் சார் ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாணவர்களுடன் பேசிய மாவட்ட ஆட்சியர் மோகன், மேல்நிலைக் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், படிக்கும்போதே எப்படி இலக்கை தேர்வு செய்ய வேண்டும், அதனை அடைவதற்கு எப்படி செயல்பட வேண்டும் உள்ளிட்டவற்றையும் எடுத்துரைத்தார். மேலும், “மாணவர்களாகிய நீங்கள், செல்போன், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற கவனத்தை சிதறடிக்கும் செயல்களில் ஈடுபடாமல் லட்சியத்தினை அடைவதற்கு நல்ல முறையில் கல்வி பயின்றிட வேண்டும்.

உலகத்தில் அழிக்க முடியாத சொத்து கல்வி ஒன்றே. அப்படிப்பட்ட கல்வியை நன்கு பயின்று, தங்கள் வாழ்க்கைக்கான அடுத்த கட்ட அடித்தளத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பச் சூழல் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திடும் வகையில் நல்ல முறையில் கல்வி பயின்று பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்” என்றார்.

அதை தொடர்ந்து பேசிய பள்ளி மாணவர் ஒருவர், “என் அப்பாவுக்கு மது பழக்கம் உள்ளதால், அவரிடம் நான் பேசுவது கிடையாது. ஆனால், எனக்கு என் அப்பா என்றால் மிகவும் பிடிக்கும். நான், ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது தான் ஆசை.

அரசுப்பள்ளி மாணவர்

இறையன்பு சார் என் இன்ஸ்பிரேஷன். பொறுப்புக்கு வந்து, குடிகாரர்கள் இல்லா தமிழ்நாடாக மாற்ற வேண்டும். என்னுடைய பெரிய லட்சியமே அதுதான். எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து அந்த பொறுப்புக்கு நான் வந்துவிடுவேன். என் அப்பா, என்னுடன் இருந்தால் போதும். அதன் பின் அவரை ராஜா மாதிரி பார்த்துக்கொள்வேன். எனது லட்சியமே இதுதான். என் மூளையும் இதைத்தான் சிந்தித்துக்கொண்டே இருக்கிறது” என்றார். இந்த வார்த்தைகள் கேட்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.