திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்து தகராறில் விவசாயியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சேலை கண்டிகை பகுதியை சேர்ந்தவர் விவசாயி கண்ணன்(58). இவருக்கும், பக்காத்து வீட்டை சேர்ந்த சந்தானம் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இதையடுத்து நேற்றும் இவர்கள் இடையே மீண்டும் சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சந்தானம் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கத்தியால் குத்திய சந்தானத்தை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.