தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: தை அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு, நாளை முதல் வரும் 22ம் தேதி வரை 4 நாட்களுக்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை தை பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், இளநீர் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.

இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெறும். 20ம் தேதி சிவராத்திரி அன்றும் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. 21ம் தேதி தை அமாவாசை என்பதால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவௌியை கடைப்பிடிக்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்.

இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. ஓடைகளில் பக்தர்கள் இறங்கி குளிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாணிப்பாறை விலக்கில் இருந்து வனத்துறை கேட் பகுதி வரை சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தாமல் அந்த பகுதிகளுக்குள் உள்ள தோட்டங்களுக்குள் நிறுத்துமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.