கன்று குட்டிகள் குறைபாடுகளுடன், இரு தலைகள், மூன்று தலைகள், இரண்டுக்கும் மேற்பட்ட கண்கள், வாய் ஆகியவற்றுடம் பிறக்கும் சம்பவங்களை நாம் கேட்டிருப்போம். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் கால்கள் இல்லாமல் கன்று குட்டி பிறந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது பழங்கூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் ராஜேந்திரன் (55) கிராமத்தில் விவசாயம் செய்துகொண்டு, 10த்துக்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில், ராஜேந்திரனுக்கு சொந்தமான சினையாக இருந்த பசு மாடு ஒன்று இன்று காலை 8 மணி அளவில் கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டிக்கு நான்கு கால்களும் இல்லாதததை பார்த்து அதன் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், பால் குடிக்க முடியாத கன்றுக்குட்டிக்கு பாட்டில் மூலம் பால் புகட்டி வருகிறார். நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த இந்த கன்று குட்டியை பழங்கூர் மற்றும் அதன் அருகாமையில் உள்ள கிராம பொதுமக்கள் வியந்து பார்த்துதோடு சோகத்துடன் செல்கின்றனர்.
கன்று குட்டிகள் குறைபாடுகளுடன் பிறப்பதற்கு, கருவின் வளர்ச்சியின் போது உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி காரணம் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். தாய் பசுவின் உடலில் கருவின் வளர்ச்சியின் போது, செல்கள் பல பகுதிகளாகப் பிரியும் நிகழ்வின் போது சில சமயங்களில் உயிரணுக்கள் தேவைக்கு அதிகமாக வளர்ந்து விடும் அல்லது மிகவும் குறைந்து விடும். இதனால் தான் இரண்டு தலைகள், மூன்று கண்கள், நான்கு கண்கள், இரு வாய், நான்கு காது ஆகியவை உருவாகின்றன அல்லது சில பாகங்கள் இல்லாமல் பிறக்கின்றன என்றார்.
முன்னதாக சென்ற அக்டோபர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சிவபுரம் ஊராட்சியில் ஒரு ஆடு கால்கள் இல்லாத குட்டியை ஈன்றது. ஆட்டு குட்டி நான்கு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்த நிலையில், பால் கூட அருந்த முடியாத நிலையில் இருந்தது, அந்த ஆட்டுக்குட்டிக்கு அதன் உரிமையாளர் பாசத்துடன் மடியிலிட்டு பாட்டில் மூலம் பால் வழங்கிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.