காத்மண்டு: நேபாள விமான விபத்தில் இதுவரை ௬௮ உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ௭௧ ஆக உயர்ந்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் இருந்து சுற்றுலா நகரான பொக்காராவுக்கு ‘யெட்டி’ ஏர்லைன்ஸ் விமானம் ௬௮ பயணியர் மற்றும் நான்கு விமான ஊழியர்களுடன் ஜன. ௧௫ல் பறந்தது. தரை இறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன் இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் திடீரென தீப்பிடித்து ஆற்றுப் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக ௫௩ நேபாளிகள் மற்றும் ஐந்து இந்தியர்கள் உட்பட ௧௫ வெளிநாட்டினர் என ௬௮ பேர்களின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மீதமுள்ள நான்கு பேர்களது உடல்களை அந்நாட்டு ராணுவத்தினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதன் வாயிலாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக ௭௧ ஆக அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒருவரது உடலை தேடி வருகின்றனர். இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் இருந்து இரண்டு கறுப்பு பெட்டிகள் மீட்கப்பட்டன. இதில் விபத்தின் போது விமானி அறையில் நடந்த உரையாடல்கள் விமானத்தின் வேகம் உயரம் திசைகள் குறித்த தகவல்கள் உள்ளிட்டவை பதிவாகி உள்ளன. இந்த கறுப்பு பெட்டிகள் நேபாள உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானம் பிரான்சு நிறுவனத் தயாரிப்பு என்பதால் இந்த கறுப்பு பெட்டிகளை ஆராய்வதற்கு அந்நாட்டில் இருந்து நிபுணர்கள் வர இருப்பதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement