பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்; இணையதள முன்பதிவு தொடங்கியது..!

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, கும்பாபிஷேகத்திற்காக கடந்த மாதம் 25-ம் தேதி பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்துகொள்வதற்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள www.palanimurugan.hrce.gov.in மற்றும் www.hrce.tn.gov.in ஆகிய இணையதளத்தில் இன்று (ஜன. 18-ம் தேதி) முதல் 20-ம் தேதி வரை 3 நாட்கள் முன்பதிவு செய்யலாம்.

இதற்கு ஆதார் அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை அளித்து முன்பதிவு செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

21-ம் தேதி குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு 22-ம் தேதி உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் மின்னஞ்சல் வழியாகவும், செல்போன் குறுந்தகவல் மூலமும் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவல் கிடைக்கப்பெற்றவர்கள் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் பதிவேற்றம் செய்ய சான்றிதழ் நகலுடன் வந்து கட்டணமில்லா சீட்டை பெற்று கொள்ளலாம்.

மேற்கண்ட 2 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கட்டணமில்லா சீட்டு பெற முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு வருவோருக்கு சீட்டு வழங்க இயலாது. இந்த சீட்டை கொண்டு படிப்பாதை வழியே மட்டுமே மலைக்கோவிலுக்கு செல்லலாம். ரோப்கார், மின்இழுவை ரயில் போன்ற சேவைகளுக்கு இது பொருந்தாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.