ஈரோடு இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே நிற்கும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி விலக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, ” இந்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியல் கட்சி பிரதிநிதி போல் செயல்படக்கூடாது. இந்து மதத்தை பாரதிய ஜனதாவால் காப்பாற்ற முடியாது. எல்லோரையும் ஒன்றாக இணைக்க ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா-வால் முடியாது. ஆளுநர் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை, அவர்கள் பதுங்குகிறார்கள்.
வேறு ஏதாவது வேடம் போடலாமா என நினைக்கின்றார்கள். ஆளுநர் திரும்பத் திரும்ப சனாதன தர்மம் தமிழ் தர்மம் என்று சொல்கிறார் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆர் எஸ் எஸ் குழு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அது வெற்றி பெறவில்லை. அதனால் ஆளுநர் அதை திரும்ப பெற்று இருக்கிறார். ஈரோடு எங்கள் தொகுதி. மீண்டும் காங்கிரஸ் கட்சி தான் நிற்கும். திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். ஈரோடு தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கேட்டு மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளேன்” எனவும் தெரிவித்தார்.