விராலிமலை: விராலிமலை அருகே மீன் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை வயல்களுக்கு தெளித்து பெண் விவசாயி ஒருவர் அதிக மகசூல் ஈட்டி வருகிறார். கொடியங் காட்டுபட்டியை சேர்ந்த லக்ஷ்மி தமக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உர தட்டுப்பாடு நிலவிய போது பொறியியல் பட்டதாரி மகன் மற்றும் டிப்ளமோ படித்த மகளின் உதவியால் யூ டியூப் உள்ளவற்றின் மூலம் மீன் கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை திரவ விலை பொருள் குறித்து அறிந்து கொண்டார்.
மீன் கழிவுகளான குடல், தலை, தோல் ஆகியவற்றை 5 கிலோ அளவுக்கு எடுத்துக்கொண்டு அதில் வெல்லம் வாழைப்பழத்தை சேர்த்து நொதிக்க வைத்து காற்று புகாத பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து 21 நாட்களுக்கு பின்பு அந்த கழிவுகளை இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்தி வருகிறார் லக்ஷ்மி. இதனால் வேளாண் பயிர்கள் வளமான வேர்களை உற்பத்தி செய்து பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்த்து கடுமையாக போராடுகிறது. இதில் மண்வளம் ஆரோக்கியமாக மாறுவதுடன் நல்ல விளைச்சலும் கிடைப்பதாக 5ம் வகுப்பு மட்டுமே படித்த இந்த வில்லேஜ் பெண் விஞ்ஞானி மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இதனை விவசாயிகள் அனைவரும் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.