காதல் ஜோடி தற்கொலை… ஆத்மாவுக்கு பயந்து சிலைக்கு திருமணம் நடத்திய பெற்றோர்..!

குஜராத்தின் தாபியைச் சேர்ந்தவர்கள் கணேஷ் மற்றும் ரஞ்சனா. இருவரும் தூரத்து உறவினர்கள். இந்தநிலையில், கணேஷும் ரஞ்சனாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. வாழ்ந்தால் ஒன்றாகத்தான் வாழ்வோம் இல்லையென்றால் திருமணம் செய்துகொள்ளமாட்டோம் என்று இருவரும் உறுதியாக இருந்த நிலையிலும் பெற்றோர்கள் அதை ஏற்கவில்லை.

இந்த நிலையில், உயிருக்கு உயிராய் நேசித்து வந்த இருவரும் திருமணம் கைகூடவில்லையே என்ற விரக்தியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதை எதிர்பார்க்காத உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில், காதலர்களின் தற்கொலை அவர்களது குடும்பத்தின் நிம்மதியை தூள் தூளாக்கியது. இரு வீட்டாரும் நிம்மதியாக உறங்கி எழ முடியாமல் தினம் தினம் புலம்பி வந்துள்ளனர்.

ஆசை நிறைவேறாமல் இருவரும் தற்கொலை செய்துகொண்டதால் அவர்களது ஆத்மாதான் இவ்வாறு தொல்லை கொடுத்து வருவதாக இரு வீட்டாரும் நம்பினர். இந்நிலையில், தங்களது விடாப்பிடியால் தானே இருவரும் தற்கொலை செய்துகொண்டனர் என்று கவலையில் இருந்து வந்தவர்கள் கணேஷ் ரஞ்சனாவின் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களது ஆத்மாவை சாந்தி அடைய வைக்க முடிவெடுத்தனர்.

அதன்படி, இரு வீட்டாரும் காதல் ஜோடியின் முக வடிவில் இரண்டு சிலைகளை வடிவமைத்து திருமண சடங்கை நடத்தியுள்ளனர். இதனால் இருவர் தற்கொலை குறித்த குற்ற உணர்ச்சி நீங்கிவிட்டதாகவும், அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்றும் குடும்பத்தினர் கருதுகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடிக்கு சாதி, மதம் எதுவும் பிரச்சினை இல்லை. இருவரும் தூரத்து உறவினர்கள் என்பதால் மட்டுமே அவர்களது பெற்றோர் காதலை ஏற்காமல் இருந்துள்ளனர். பெற்றோரின் பிடிவாதத்தால் அவரவர் பிள்ளைகளை இழந்துவிட்டு தற்போது சிலைகளுக்கு திருமணம் நடத்தி பரிகாரம் செய்து வைத்த பெற்றோரின் செயல் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.