நடிகர் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படமும் கடந்த 11-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தூத்துக்குடியில் இரண்டு திரையரங்குகளில் ’துணிவு’ திரைப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் வீரபாகு. ஆட்டோ டிரைவரான இவர், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் எனச் சொல்லப்படுகிறது. இவர், தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி போல்டன்புடத்தில் உள்ள திரையரங்கில் துணிவு திரைபடத்தைப் பார்ப்பதற்காக, தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் சென்றிருக்கிறார்.

வீரபாகு, மது அருந்தியிருந்ததால் தியேட்டர் ஊழியர்கள் அவரை மட்டும் உள்ளே அனுமதிக்க மறுத்து, திருப்பி அனுப்பி விட்டனராம். இதனால், தன் குடும்பத்தினரை மட்டும் தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டாராம் வீரபாகு. இந்த நிலையில், திரைப்படம் முடிந்து வீட்டுக்குச் சென்ற வீரபாகுவின் மனைவி, குழந்தைகள் வீட்டின் கதவை தட்டியிருக்கின்றனர்.
கதவு வெகு நேரமாக திறக்கப்படாததால், ஜன்னல் வழியே வீட்டுக்குள் பார்த்திருக்கின்றனர். அப்போது, வீட்டுக்குள் வீரபாகு தூக்கில் சடலமாகத் தொங்கியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீரபாகு தற்கொலை செய்துகொண்டது குறித்து, “படம் பார்க்க ஆசையுடன் கிளம்பிப் போனான். படம் பார்க்க முடியாத விரக்தியில வீட்டுக்கு வந்துட்டான்” என்கின்றனர் அவரின் உறவினர்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் விசாரித்தோம். “ `துணிவு’ திரைப்படம் திரையிடப்பட்டிருக்கும் அந்த திரையரங்கம் முற்றிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்ட மல்டி ஃபிளக்ஸ் திரையங்கம். மது அருந்திவிட்டு திரைப்படம் பார்க்க வந்தால் அனுமதி கிடையாது என்பது திரையரங்க நிர்வாகத்தின் விதிமுறை. வீரபாகு, மது அருந்தியிருந்ததால் அவரை மட்டும் திரையரங்க ஊழியர்கள் உள்ளே அனுப்ப மறுத்துள்ளனர். குடும்பத்தினரை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு, அவர் கிளம்பிச் சென்றிருக்கிறார். வீட்டில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். திரைப்படத்திற்கு அனுமதி மறுத்ததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என விசாரணை செய்து வருகிறோம்” என்றனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.